‘நீரின்றி அமையாது உலகு’ இது உலகுக்கும் பொருந்தும்… உடலுக்கும் பொருந்தும். நம் உடலின் செயல்பாட்டுக்கு, தண்ணீர் மிக முக்கியம். தினமும் உடலுக்குப் போதிய தண்ணீர் இல்லாமல் போகும்போது, சிறுநீரகச் செயல்பாட்டில் பிரச்சினை ஏற்படும். குறிப்பாக, கோடையில் அதிக அளவு தண்ணீர் குடிப்பதும், கல் அடைப்பு உருவாகாமல் தடுக்கும் சத்தான உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமும் கல் அடைப்பு வராமல் காக்கலாம். அதற்கு இந்தப் பூசணிக்காய் மோர்க்கூட்டு பெஸ்ட் சாய்ஸ். இதில் நல்ல பாக்டீரியாவை வளரச்செய்யும் ப்ரோபயோடிக் அதிகம். உடல் மெலிந்தவர்கள், அசிடிட்டி, எரிச்சல், வயிற்றுவலி, வயிற்றில் பூச்சி, கணைய நோய் இருப்பவர்களுக்கும் ஏற்ற ரெசிப்பி. இதய நோயாளிகள் தேங்காய்க்குப் பதிலாக, பொட்டுக்கடலை மாவை வறுத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.
என்ன தேவை?
- பூசணிக்காய் – 200 கிராம்
- தேங்காய்த் துருவல் – ஒரு கப்
- கடுகு, உளுத்தம் பருப்பு, தேங்காய் எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- தயிர் – 100 மில்லி
- கறிவேப்பிலை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பூசணிக்காயைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவைக்கவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை அரைத்து, தயிரில் கலந்து, வேகவைத்த பூசணிக்காயுடன் சேர்த்துக் கலக்கவும். எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, கூட்டில் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
குறிப்பு: பூசணிக்காயை அரைத்து ஜூஸாக்கி, தயிர் கலந்து, உப்பு போட்டுக் குடித்தால், உடல் சூடு தணியும்.