புதுக்கோட்டை: சாலையோரம் நின்ற காரில் 5 உடல்கள் மீட்பு!

Published On:

| By Kavi

புதுக்கோட்டையில் கார் ஒன்றில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே நமனசமுத்திரத்தில் இன்று (செப்டம்பர் 25) ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நமனசமுத்திர  போலீசார் காரை திறந்து பார்த்த போது ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் இருந்தனர்.

காரிலிருந்து 2 பெண்கள் உட்பட 5 நபர்களை சடலமாக மீட்ட  போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்த அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் சேலத்தில் இருந்து வந்துள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

சேலம் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் (50), அவரது மனைவி நித்யா (48), தாயார் சரோஜா (70), மகள் நிகரிகா (22), மகன் தீரன் (20) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என்பது தெரிய வந்துள்ளது.

அந்தக் கார் எண் சேலம் பதிவெண் கொண்ட கார் என்பதால் அவர்கள் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் உறுதி செய்தனர்.

கடன் தொல்லை காரணமாக 5 பேரும் விஷம் குடித்து காரிலேயே தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்ந்து அவர்கள் எதற்கு புதுக்கோட்டை வந்தார்கள்? உண்மையிலேயே கடன் தொல்லை தான் காரணமா? அல்லது காரில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார்களா என பல்வேறு கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share