புதுச்சேரி மாநிலம், கரிக்கலாம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசங்குளம் கிராமத்தில் வசிக்கும் மணிகண்டன், பிரபு ஆகிய ரவுடிகள் இருவருக்கு சம்மன் கொடுக்கச் சென்ற காவல்துறையினரை, ரவுடிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் சேர்ந்துகொண்டு தாக்கிய காட்சி வெளியாகியிருக்கிறது.
ரவுடிகளுக்கு சம்மன் கொடுக்கச் சென்றபோது காவல்துறையினரை மிரட்டியதுடன், காயப்படுத்த முற்பட்டிருக்கின்றனர். சூழல் சரியாக இல்லாததை உணர்ந்து, மேற்கொண்டு காவலர்களை அழைக்க அவர்கள் முயன்றபோது காவல் துறையினரின் வாக்கி டாக்கி மற்றும் செல்ஃபோனை பிடுங்க முயற்சி நடைபெற்றிருக்கிறது. அப்போது இரு தரப்புக்கும் நடைபெற்ற மோதலினால் அரசங்குளம் சாலை முழுவதும் பதட்டமான நிலைக்குச் சென்றது.
இதுகுறித்து மின்னம்பலம் செய்தியாளர் களத்துக்குச் சென்று விசாரித்தபோது, அரசங்குளம் மற்றும் அதனைச் சுற்றிய ஏரியாக்கள் பல சமுதாயத்தினரும் ஒன்றாகச் சேர்ந்து வாழும் இடமென்றும், வேலை வாய்ப்பு இல்லாததால் அங்கிருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் கமெர்ஷியலான ரவுடிகளாக மாறிவிட்டனர் என்றும் பொதுமக்கள் கூறினர். எங்கிருந்தாவது அழைப்பு வந்தால் கூலியை வாங்கிக்கொண்டு சொல்வதை செய்யும் கூலிப்படையாகவே பலர் மாறிவிட்டதையும் குறிப்பிட்டனர்.
புதுச்சேரி மாநிலம் ரவுடிகளின் புகலிடமாக மாறிக்கொண்டே வருவதாக காவல்துறையினரும் கூறுகின்றனர். எங்கிருக்கும் ரவுடிகளும், ஏதாவது குற்றச் செயலில் ஈடுபட்டுவிட்டு புதுச்சேரிக்குச் சென்று தலைமறைவாகின்றனர். இதனால் கிடைக்கும் தொடர்பின் மூலம் அங்கிருக்கும் இளைஞர்களும் கூலிப்படையினராக மாறிவருவதாகக் கூறுகிறார்கள்.,”
