புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் செய்த பொதுக் கூட்டத்தை ஒழுங்கு செய்து கவனம் பெற்ற போலீஸ் எஸ்.பி. இஷா சிங் டெல்லிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த துயரத்துக்குப் பின்னர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டம் டிசம்பர் 9-ந் தேதி புதுச்சேரியில் நடைபெற்றது.
கரூரைப் போல எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதில் புதுச்சேரி போலீசார் முழு கவனம் செலுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரையும் கூட போலீஸ் எஸ்.பி. இஷா சிங், விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வாக்கு வாதம் செய்தது கவனம் பெற்றது. பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க முயற்சித்த புஸ்ஸி ஆனந்தைக் கண்டித்த எஸ்.பி. இஷா சிங், “காவல்துறை என்ன செய்யனும்னு நீங்க சொல்லாதீங்க.. 41 பேர் இறந்தது மறந்து போச்சா? இங்கு ஏதாவது நடந்து உயிரிழப்பு ஏற்பட்டுச்சா நாங்கதான் பொறுப்பு.. நாங்க என்ன செய்யனும்னு நீங்க சொல்லாதீங்க” என டென்ஷனானார் இஷா சிங். இந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்து இஷா சிங் டெல்லிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
