புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 16; பாஜக 10; அதிமுக 2; லஜக 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
புதுச்சேரியில் நாளை வேட்பு மனுத் தாக்கல் முடிவடையும் நிலையில் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

உப்பளம் தொகுதியில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதியில் புதுச்சேரி அதிமுக முன்னாள் துணைச் செயலாளர் காந்தி ஆகியோர் போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இபிஎஸ் அறிவிப்புக்கு எதிர்ப்பு
இதனிடையே புதுச்சேரி தேர்தலில் தமக்கு போட்டியிட வாய்ப்பு தராததால் புதுவை அதிமுக துணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அத்துடன் புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து என்.ஆர்.காங்கிரஸில் வையாபுரி மணிகண்டன் இணைந்தார்.
