புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 16, திமுக 12, விசிக-1, சிபிஐ 1 இடத்தில் போட்டியிட தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக- அதிமுக- லஜக மற்றும் திமுக- காங்கிரஸ் அணிகள் இடையேதான் போட்டி. பாஜக அணியில் என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுக 2, லஜக 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடித்து வந்தது. புதுச்சேரியில் நேற்று காலை முதலே பெரும் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பி, புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் இடையேயான பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவு எட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் புதுவையில் நேற்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் நேற்று சுமார் 10 மணிநேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் முதல்வர் ஸ்டாலினை மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் சென்னையில் சந்தித்து பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் 16; திமுக 12; விசிக-1, சிபிஐ 1 இடத்தில் போட்டியிடும் என அறிவித்தார்.
