6 மாநிலங்களில் கைவரிசை : கொள்ளையனை தட்டி தூக்கிய புதுச்சேரி போலீஸ்!

Published On:

| By vanangamudi

puducherry police arrest man robbed in 6 states

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவை உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை புதுச்சேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். puducherry police arrest man robbed in 6 states

கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் புகார் ஒன்று அளித்தார். 

ADVERTISEMENT

அதில், “என் வீட்டில் இருந்த 51 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை போனதாகவும், அதை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும்” கூறியிருந்தார். 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். 

ADVERTISEMENT

புதுச்சேரி எஸ்எஸ்பி கலைவாணன், எஸ்.பி வீரவல்லபேன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், கலையரசன் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. புகாரளித்த ஸ்ரீதரன் வீட்டுக்கு சென்று போலீசார் பார்வையிட்டனர். 

அப்போது கொள்ளையன் கதவை உடைக்காமல் ஜன்னலை உடைத்து உள்ளே வந்து திருடி சென்றது தெரியவந்தது. 

ADVERTISEMENT

தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கோமராஜூலுங்கா பகுதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது. 

இதையடுத்து கடந்த ஜூன் இறுதியில் விஜயவாடாவில் உள்ள ரயில் நிலையத்தில் வைத்து வெங்கடேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். 

இது தொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, 

“ஸ்ரீதரன் வீட்டில் நகைகள் கொள்ளை போனதாக 18ஆம் தேதி புகார் வந்தது. இதனால் அதற்கு முந்தைய இரு நாட்களான 16, 17 ஆகிய தேதிகளில் பதிவான சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம். 

கடலூர், திண்டிவனம், சென்னை ஆகிய மூன்று வழியில் உள்ள எல்லை பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு கார் சென்று வந்தது பதிவானது. 

அதாவது 10 ஆம் தேதி சென்னையிலிருந்து புதுச்சேரிக்குள் வந்த ஒரு கார் புதுச்சேரிக்குள் உலா வந்துள்ளது, 16ஆம் தேதி கடலூர் மார்க்கமாகவும் திண்டிவனம் மார்க்கமாக செல்வதும் திரும்பி புதுச்சேரி நோக்கி வருவதுமாக இருந்துள்ளது. 

பின்னர் திண்டிவனம் மார்க்கமாக சென்று மீண்டும் புதுச்சேரிக்குள் வந்தது. அதைத்தொடர்ந்து மறுபடியும் கடலூர் மார்க்கமாக சென்று வந்தது பதிவாகியிருந்தது. 

போலீசாரை திசை திருப்புவதற்காகவே இப்படி சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

பின்னர் புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவிலும் அந்த கார் பதிவாகியிருந்தது. 

இதையடுத்து அந்த  கார் நம்பரை வைத்து விசாரித்தபோது, அது வாடகை கார் என்பதும் சென்னையைச் சேர்ந்த வண்டி என்பதும் தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து தனிப்படை சென்னை சென்று விசாரணை மேற்கொண்டது. சென்னை சென்ட்ரலில் அந்தக் காரை கண்டுபிடித்து அதன் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது அந்த ஓட்டுநர், “ஆந்திராவில் இருந்து வந்த நபர் புதுச்சேரிக்கு செல்ல வேண்டும் என்று வண்டி கேட்டார். அவர் ஒரு ஆபிஸர் போல் இருந்தார். தனியாகத்தான் வந்தார்” புதுச்சேரியில் ஒரு வாரத்துக்கும் மேற்பட்ட நாட்கள் தங்கி இருந்தார் என்று கூறினார். 

அவரிடம் அந்த நபர் எங்கெங்கு தங்கி இருந்தார் என்று விசாரித்தபோது, புதுச்சேரியில் 16, 17 ஆகிய தேதிகளில் இரு ஹோட்டலில் தங்கியிருந்தார். அதாவது 16ஆம் தேதி ஒரு ஹோட்டலிலும் 17ஆம் தேதி ஒரு ஹோட்டலிலும் தங்கி இருந்தார்” என்று தெரிவித்தார். 

இதையடுத்து அந்த நபர் தங்கியிருந்த முதல் ஹோட்டலுக்கு சென்று, அவர் கொடுத்த ஐடி கார்டை வாங்கி போலீசார் பார்த்தனர். 

அதை வைத்துக்கொண்டு அந்த நபர் தங்கியிருந்த அடுத்த ஹோட்டலில் சென்று ஆராய்ந்து பார்த்தனர் . அங்கும் அதே அடையாள அட்டையை கொடுத்திருந்தார்.  இதில் அவர் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பது தெரியவந்தது.

அவர் ஹோட்டலில் கொடுத்திருந்த செல்போன் எண்ணையும் போலீசார் வாங்கினர். 

அந்த அடையாள அட்டையில் இருந்த புகைப்படத்தையும் சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளையும் ஒப்பிட்டு பார்த்து, அந்த காரில் பயணித்ததும் ஹோட்டலில் தங்கியிருந்ததும் ஒரே நபர் என உறுதி செய்தனர். 

தொடர்ந்து அந்த போட்டோவை போலீசாரின் க்ரைம் டீம் வாட்ஸ் ஆப் குழுவிலும் அனுப்பப்பட்டது. 

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் க்ரைம் டீம் வாட்ஸ் ஆப் குழுக்களிலும் பகிரப்பட்டது.

அப்போதுதான் கேரளா போலீசார், அந்த போட்டோவில் உள்ளவன் தங்கள் மாநிலத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான். குற்ற செயலில் தேடப்படும் நபர் என்று புதுச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து வெங்கடேஸ்வரன் ஹோட்டல்களில் கொடுத்த செல்போன் நம்பரை போலீசார் ஆய்வு செய்தனர். 

 அந்த எண்ணில் இருந்து யார் யாருக்கு பேசியிருக்கிறார் என்று பார்த்ததில் தன்னுடைய, சகோதரி, மனைவி ஆகியோரது நம்பருக்கு போன் செய்து பேசியது தெரியவந்தது. 

தொடர்ந்து வெங்கடேஷ்வரன் தொலைபேசி நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆனதால், அவரது சகோதரி, மனைவி உள்ளிட்டோரது நம்பரை ட்ரேஸ் செய்தோம். 

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு அவரது மனைவி நம்பரில் இருந்து ஒரு புதிய நம்பருக்கு போன் போனது. 

அந்த புதிய போன் நம்பர், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வெங்கடேஸ்வரனுடையது என்பது தெரியவந்தது. 

இப்படியே ட்ரேஸ் செய்து தான் விஜயவாடாவில் வைத்து கைது செய்தோம். 

வெங்கடேஸ்வரனிடம் விசாரித்தபோது, “நான் இஎஸ்ஐ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கிறேன். ஒரு மாநிலத்திற்கு கொள்ளையடிக்க சென்றால் ஒரு வாரத்துக்கு முன்பே சென்று அந்த பகுதியின் சுற்று வட்டார பகுதியில் வாக்கிங் போவது போல் சென்று நோட்டமிட்டு வந்து விடுவேன். 

வசதியான வீடு எது? பூட்டிக்கிடக்கும் வீடு எது? ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி எது? என்ற நோட்டமிட்டு வந்து விடுவேன். 

பிறகு கைரேகை பதியாத அளவுக்கு கையில் கிளவுஸ், காலில் ஷூ அணிந்து சென்று, வீட்டின் கதவை உடைக்காமல் ஜன்னலை கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு உடைத்து உள்ளே சென்று திருடிவிட்டு வந்து வடுவேன்.

ஒரு மாநிலத்துக்கு ஒருமுறை வந்தால் 3, 4 வீடுகளில் நகை பணங்களை கொள்ளையடித்து வந்து விடுவேன்.  அப்படிதான் புதுச்சேரிக்கும் பிப்ரவரி 10ஆம் தேதியே வந்து நோட்டமிட்டு மூன்று வீடுகளில் கொள்ளையடித்தேன்.

பின்னர் என் மீது சந்தேகம் வராத அளவுக்கு நான் கையில் அணிந்து சென்ற கிளவுஸ் மற்றும் ஷூக்களை கால்வாயில் தூக்கி எரிந்துவிட்டேன். 

பாண்டிச்சேரியில் கொள்ளையடித்த நகையை ஹைதராபாத்தில் உள்ள கடை ஒன்றில் விற்றுவிட்டு, அதில் வந்த பணத்தை எடுத்துக்கொண்டு நேபாளுக்கு குடும்பத்துடன் டூர் சென்றுவிட்டேன். 

அங்கு ஸ்டார் ஹோட்டலில் தங்கி குடும்பத்தோடு ஜாலியாக செலவழிப்பேன். 

திருடும் நகை பணத்தை நான் சேமித்தது கிடையாது. ஆடம்பரமாக வாழ்வேன். இல்லையென்றால் ஆன்லைன் ரம்மி விளையாடுவேன்” என்று கூறினான் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். 

தொடர்ந்து ஹைதராபாத்துக்கு சென்று வெங்கடேஸ்வரன் விற்ற நகையை போலீசார் மீட்டு வந்தனர். 

வெங்கடேஸ்வரன் மீது  கோவா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் சுமார் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. 

மூன்று மாதத்துக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு மாநிலத்துக்கு சென்று கொள்ளையடித்து வந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதில் ஆந்திராவில் போலீசார் தேடிய சமயத்தில் புதுச்சேரி வந்து தங்கி தலைமறைவாக இருந்துள்ளான். புதுச்சேரியில் அனைத்து ஏரியாவும் இவனுக்கு அத்துபடி என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

தற்போது புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான் கொள்ளையன் வெங்கடேஷ்வரன். puducherry police arrest man robbed in 6 states

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share