தவெக பொதுக்கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கிய பெண் ஐபிஎஸ் இஷா சிங்கை நேரில் அழைத்து புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டியுள்ளார்.
கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி புதுச்சேரியின் உப்பளம் துறைமுக மைதானத்தில் தவெக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்திற்கு 5,000 பேருக்கு மட்டுமே க்யூஆர் கோடுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில்,அதையும் தாண்டி ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது.
அப்போது புஸ்ஸி ஆனந்த் க்யூஆர் கோடு இல்லாதவர்களையும் உள்ளே வருமாறு அழைத்தார். இதனால் கோபமான, அங்கு பணியில் இருந்த இஷா சிங் ஐபிஎஸ், “உங்களால் அங்கு 40 பேர் இறந்திருக்கிறார்கள், இங்கு என்ன செய்ய வேண்டுமென நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள்’ என கூறினார்.
.ஒரு பெண் அதிகாரி, எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காமல், ஆயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி இஷா சிங்கிற்கு பாராட்டுக்கள் குவிந்தன.
இந்த நிலையில், தவெக. பொதுகூட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக எஸ்.எஸ்.பி இஷா சிங்கிற்கு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில டிஜிபி ஷாலினி உள்ளிட்டோரும் இஷா சிங்கை பாராட்டினர்.
