புதுச்சேரியில் QR-CODE அனுமதி சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்ட புஸ்ஸி ஆனந்தை பெண் எஸ்பி கடுமையாக எச்சரித்துள்ளார். இதுகுறித்து வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அக்கட்சியின் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 5ம் தேதி புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரி நிர்வாகம் திட்டவட்டமாக ரோடு ஷோக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டது. இதனால் வேறு வழியின்றி இன்று (டிசம்பர் 9) புதுச்சேரி உப்பளம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்னும் சற்று நேரத்தில் விஜய் பேச உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இன்று காலை கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும் கலைந்து செல்லாமல் விஜயை பார்க்க காத்திருந்தனர்.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசாரை தள்ளி விட்டு வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து லேசாக தடியடி நடத்தி நிலைமையை சீராக்கினர்.
இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போதிய அளவில் கூட்டம் சேராததால், QR-CODE அனுமதி சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்ககோரி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோபமடைந்த பெண் காவல் அதிகாரி, ”உங்களால் ஏற்கனவே நிறைய பேர் உயிரிழந்திருக்கின்றனர். யாரேனும் உயிர் இழந்தால் நாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம்” என புஸ்ஸி ஆனந்தை கடுமையாக எச்சரித்தார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
