முதல்வர் எஸ்கார்ட் கார் விபத்து… வழக்குப் பதிவு செய்யாத மர்மம்!

Published On:

| By vanangamudi

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் எஸ்கார்ட் கார் விபத்துக்குள்ளான நிலையில், போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்யாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருந்து வருகிறார் ரங்கசாமி. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் கேட்கப்பட்டும் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்து வருகிறார் ரங்கசாமி. Rangasamy convoy accident FIR

“ஆட்சி அமைக்கும்போதே இரண்டரை ஆண்டுகாலம் என்.ஆர்.காங்கிரஸ், இரண்டரை ஆண்டுகாலம் பாஜக என முதல்வர் பதவி பகிர்ந்தளிக்கப்படும் என்ற வாய்மொழி உத்தரவு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், முதல்வர் ரங்கசாமியோ முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் இருக்கிறார். இதனால் தொடர்ந்து பாஜகவுக்கும் என்.ஆர்.காங்கிரஸிற்கும் முட்டல் மோதல் நடந்து வருகிறது. இதனால் புதுவை பாஜக அமைச்சர்கள் மூலமாக முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது” என்கிறார்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்.

இந்தநிலையில், புதுச்சேரி வழுதாவூரில் நேற்று (மார்ச் 8) உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரங்கசாமி வீட்டுக்கு திரும்பும் போது, இரவு 8 மணியளவில் மேட்டுப்பாளையம் காவல் நிலையம் அருகில் முதல்வர் எஸ்கார்ட் கார் (இன்னோவா கிரிஸ்டா PY 01 G 9565) எதிரில் வந்த தமிழ்நாடு பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் கார் மீது மோதியது. இந்த விபத்தில் இரண்டு கார்களும் சேதமடைந்தது. ஸ்விஃப்ட் காரில் பயணித்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. முதல்வர் கவனத்திற்கும் எடுத்து செல்லவில்லை.

இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஏற்கனவே பட்ஜெட் தாக்கல் செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுக்கவில்லை என்று முதல்வர் அப்செட்டில் இருந்து வருகிறார். இந்த நேரத்தில் எஸ்கார்ட் கார் விபத்து என்றால், அபசகுனம் என்று நினைத்து டென்ஷனாகி விடுவார் எனவே தான் அவரின் கவனத்திற்கு எடுத்து செல்லவில்லை” என்கிறார்கள். Rangasamy convoy accident FIR

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share