புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் இன்று (மார்ச் 7) அடக்கம் செய்யப்பட்டது.
புதுச்சேரியின் மையப்பகுதியான சோலைநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாராயணன், மலர்விழி தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் ஆர்த்தி(9), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த மார்ச் 2-ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி காணாமல் போனார். இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஆனால், சிறுமி கிடைக்காததால், முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
மார்ச் 5-ஆம் தேதி சிறுமியின் வீட்டுக்கு சிறிது தொலைவில் இருந்த சாக்கடையில் சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு மூட்டையில் இருந்த உடலை போலீசார் மீட்டனர்.
இதையடுத்து ஜிப்மர் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவேகானந்தன், கருணாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்ட சிறுமியின் உடல் அவரது பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
இன்று காலை முத்தியால்பேட்டை பாடசாலை வீதியில் உள்ள சிறுமியின் வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது. சிறுமியின் உடலை சுமந்து சென்ற இறுதி ஊர்வல வாகனத்தில் சிறுமி பயன்படுத்திய பொம்பை, புத்தகம், பை, உள்ளிட்டவை தொங்கவிடப்பட்டது.
சிறுமியின் இறுதி சடங்கு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பாப்பம்மாள் கோயில் பகுதியில் உள்ள இடுகாட்டில் சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
GOLD RATE: தாறுமாறாக உயரும் தங்கம்… நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!