மாணவன் நன்றாகப் படித்ததால் ஆத்திரம்: குளிர்பானத்தில் விஷம் கொடுத்த சக மாணவியின் தாய்!

Published On:

| By Selvam

படிப்பில் போட்டியாக இருந்ததால், பள்ளியில் படிக்கும் சக மாணவியின் தாயார், மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடடத்தில் ராஜேந்திரன், மாலதி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இவர்களுடைய  மகன் பால மணிகண்டன்.  காரைக்கால்  நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் வழக்கம் போல் நேற்று (செப்டம்பர் 3) பள்ளிக்குச் சென்றுள்ளார்.

காலை 11:00 மணி அளவில் ஒரு பெண்மணி பள்ளி வாசலில்  வந்து பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியரிடம், தான் பால மணிகண்டன் தாய் என்று தன்னை அறிமுகப்படுத்தி எட்டாம் வகுப்பு படிக்கும் பால மணிகண்டனிடம் குளிர்பானத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
puducherry boy murdered

அவர், உடனடியாக வகுப்பறையில் இருந்த பால மணிகண்டனிடம் குளிர்பானத்தை கொடுத்துள்ளார். சிற்றுண்டி இடைவேளையில் அந்த குளிர்பானத்தை பால மணிகண்டன் குடித்துள்ளான்.

நேற்று (செப்டம்பர் 3)  பள்ளி ஆண்டு விழா என்பதால், மதியம் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது பால மணிகண்டன் வீட்டுக்கு செல்லும்போது வீட்டில் வாந்தி எடுத்துள்ளான்.

ADVERTISEMENT

அதனைப் பார்த்த பெற்றோர்கள் உடனடியாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே,  குளிர்பானத்தை யார் கொடுத்தது என்று  பால மணிகண்டன் பெற்றோர் விசாரித்தனர். அப்போது, கேட்டில் இருந்த வாட்ச்மேன் ஒரு பெண்மணி வந்து கொடுத்தாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி மூலம் அதனை உறுதிப்படுத்தியதையடுத்து  காவல் நிலையத்தில் பால மணிகண்டனின் பெற்றோர் புகார் செய்தனர்.

puducherry boy murdered

விசாரணையில் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரின் தாயாரான சகாயராணி விக்டோரியா, மாணவனுக்கு குளிர்பானத்தைக் கொடுத்தது தெரிய வந்தது.

அவரைப் போலீசார் பிடித்து விசாரித்தனர். முதலில் அவர் போலீசாரிடம் தான் குளிர்பானத்தை கொடுக்கவில்லை, பிஸ்கட் மட்டுமே கொடுத்ததாக தெரிவித்தார். ஆனால் சிசிடிவி காட்சியில் குளிர்பானம் அவர் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

பால மணிகண்டன் நன்றாக படிப்பதாகவும் தற்போது நடைபெற்ற தேர்வில், அவர் முதல் மதிப்பெண் பெற்றதாக தெரிய வருகிறது.

மேலும், பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் அவன் சிறப்பாக திறமை காட்டியுள்ளார்.

அதனைப் பொறுத்துக் கொள்ளாமல் மாணவியின் தாயார் விஷம் கொடுத்ததாக பால மணிகண்டன் தந்தை ராஜேந்திரன் காரைக்கால் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதனிடையே சகாயராணி விக்டோரியா(42) மீது காரைக்கால் நகர போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்

இந்த நிலையில், மாணவன் பால மணிகண்டன் நேற்று (செப்டம்பர் 4) இரவு சிகிச்சை பலனின்றி காரைக்கால் அரசு மருத்துவமனையில் இறந்தார்.

இதனைக் கேட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

செல்வம்

.குருவிகளை போல் சுட்டுக் கொலை! தூத்துக்குடி சம்பவம்-விசாரணை அறிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share