புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
புதுச்சேரி பாஜகவில் முக்கிய புள்ளியாக இருந்து வந்தவர் சாமிநாதன். மாநில பாஜக தலைவராக மூன்று முறையும், பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார்.
2017 முதல் 2021 வரை நியமன எம்.எல்.ஏ.வாகவும் செயல்பட்டார்.
இந்தநிலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக இன்று (செப்டம்பர் 8) அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சாமிநாதன் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இருந்த பாரதிய ஜனதா கட்சியிலிருந்து இன்று முதல் முழுமையாக விலகிக் கொள்கிறேன்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் பாரதிய ஜனதா கட்சியில் பல பொறுப்புகளை வகித்துள்ளேன். பாரதிய ஜனதா கட்சியில் இருந்தபோது எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நிர்வாகிகளுக்கும். எனக்கு பதவி அளித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன். புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். ஊழலற்ற நேர்மையான புதியவர்களை கொண்டு புதிய அரசு அமைய முழுவீச்சில் பாடுபடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “நேர்மையான, ஊழலற்ற ஒரு அரசாங்கத்தை எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை என்பதால் விலகுகிறேன். இப்போது இருக்கக்கூடிய அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாகவே விலகுகிறேன்” என்று கூறியுள்ளார்.
புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் சாமிநாதன் பாஜகவில் இருந்து விலகியிருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
