திடீரென்று நிறம் மாறிய கடல்: காரணம் என்ன?

Published On:

| By Monisha

puducherry beach turns red

புதுச்சேரியில் கடல் நீர் இன்று (நவம்பர் 1) திடீரென்று சிவப்பு நிறமாக மாறியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

புதுச்சேரி கடற்கரை அழகை ரசிப்பதற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். 1.2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட புதுச்சேரி கடற்கரை சுற்றுலாப் பயணிகளால் ‘ராக் பீச்’ என்று அழைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் திடீரென்று இன்று (நவம்பர் 1) புதுச்சேரி வடிசாராய ஆலையின் பின்புறம் உள்ள குறிப்பிட்ட பகுதி செந்நிறமாக மாறியுள்ளது. குருசுகுப்பம் பகுதி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் செந்நிறமாக மாறியுள்ளது.

இதனை அறிந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தலைமைச் செயலகம் எதிரே உள்ள மணலில் இறங்கி செந்நிறமாக மாறிய பகுதியை ஆச்சரியத்துடன் புகைப்படம் எடுத்தனர்.

ADVERTISEMENT

புதுச்சேரி கடற்கரையின் குறிப்பிட்ட பகுதி 3வது முறையாக செந்நிறமாக மாறியுள்ளதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் 17 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தற்போது நிறம் மாறியுள்ள பகுதியில் கடல் நீர் செந்நிறமாக மாறியிருந்தது.

ADVERTISEMENT

கடல் நீரின் நிறம் மாறியதற்கான காரணம் என்ன என்ற காரணத்தை கண்டுபிடிப்பதற்காக அந்த நீரை சோதனைக்காக ஆராய்ச்சியாளர்கள் எடுத்து சென்றனர்.

அந்த தண்ணீர் சென்னையில் உயிரியல் மற்றும் இரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் கடல் நீர் செந்நிறமாக மாறியிருந்தது. இந்த மாற்றமானது குழப்பத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தினாலும் இந்த நிற மாற்றத்திற்கான காரணங்களை விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

puducherry beach turns red

அதன்படி, தேசிய கடல்சார் நிறுவனத்தின் (National Institute of Oceanography) முதன்மை விஞ்ஞானியான மூர்த்தி கூறும்போது,

“மண் மாசுபாடு மற்றும் மண் அரிப்பு கடல் நிற மாற்றத்திற்கான சில காரணங்களாக இருக்கலாம். மேலும் படகுகள் மற்றும் கப்பல்களில் இருந்து வெளியேறும் வண்ணப் பொருட்களாலும் இந்த நிற மாற்றம் ஏற்படலாம்” என்று தெரிவித்திருந்தார்.

ஏப்ரல் அல்லது மே மாதங்களில் கடல் நீர் சிவப்பு நிறத்தில் மாறும் நிகழ்வு ஏற்படுகிறது. அப்போது கடலில் ஏராளமான உணவுகள் கிடைப்பதால் நீர்வாழ் உயிரினங்கள் வெளிப்படும் போது தண்ணீருக்கு சிவப்பு நிறம் கிடைக்கிறது.

இது போன்ற காரணங்களால் கடல் நீர் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு செந்நிறமாக மாறும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போது கடல் நீரின் நிறம் சிவப்பானதற்கு காரணம் வடிசாராய ஆலையின் கழிவுகளாகவும் இருக்கலாம் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றார்கள்.

ஆனால், இதற்கான உண்மையான காரணம் உயிரியல் மற்றும் இரசாயன பரிசோதனைக்குப் பிறகு தான் தெரிய வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

கூழாங்கல் – விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share