புதுச்சேரியில் 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை அமைத்து முதல்வராகப் பொறுப்பேற்ற நாராயணசாமி, ஆளுநரின் நெருக்கடிகள் உள்ளிட்டவற்றைத் தாண்டி கடந்த நான்கு வருடங்களாக அரசை வழிநடத்தி வருகிறார்.
இந்தச் சூழலில்தான் முதல்வருக்கு எதிராக பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேல் போர்க்கொடி உயர்த்தினார். எதிர்முகாமில் இருப்பவர்களுடன் நட்புவைத்துக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க தனவேல் முயற்சி செய்கிறார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினர். இந்த நிலையில் முதல்வர் நாராயணசாமியின் அதிரடி நடவடிக்கையால், கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி தனவேல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தகுதி நீக்கம் தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி இதுவரையில் எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றவில்லை. மேலும், ஆட்சியைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் முதல்வர் நாராயணசாமி உற்சாகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதுதொடர்பாக புதுவை காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தோம்…
காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமிட்டு அதிமுக, காங்கிரஸ் கட்சியின் சில எம்.எல்.ஏ.க்களோடு பாஜக தரப்பு ரங்கசாமியை அணுகியது. ஆனால் கடைசி வரையில் ரங்கசாமி எந்த முடிவையும் வெளிப்படையாகச் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பேசும்போது, காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க நான் துணைபோக மாட்டேன் என்றுள்ளார் ரங்கசாமி.

முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் இந்த முடிவுக்கும், முதல்வர் நாராயணசாமியின் உற்சாகத்திற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. ஏனெனில் நாராயணசாமி ஒரு அரசியல் தந்திரவாதி. நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயவேணியிடம், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபால், அதிமுக எம்.எல்.ஏ முத்தியால்பேட்டை மணிகண்டன் இருவரும் கட்சி மாறுவதற்குப் பேரம் பேசிய ஆடியோ ஒன்று உள்ளது. இந்த ஆடியோவை வைத்து சபாநாயகர் மூலமாக விஜயவேணியிடம் புகாரைப் பெற்றுள்ளார் நாராயணசாமி.
இந்தப் புகாரை வைத்தே இரண்டு எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளார். சட்டமன்றத்தில் காங்கிரஸ் 15, திமுக 3, அதிமுக 4, என்.ஆர்.காங்கிரஸ் 7, மாஹி சுயேச்சை 1 என எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், காங்கிரஸ் பலம் 14 எம்.எல்.ஏ.க்களாகக் குறைந்துவிட்டது. எனினும், சுயேச்சை எம்.எல்.ஏ ராமச்சந்திரன் காங்கிரஸுக்கு ஆதரவளிக்கிறார். கூட்டணிக் கட்சியான திமுகவின் ஆதரவும் உள்ளதால் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்தில்லை. ஆனாலும், எதிர்க்கட்சியின் பலத்தைக் குறைக்க முயல்வதில் ரங்கசாமி பின்வாங்கிவிட்டார்” என்கிறார்கள்.
**வணங்காமுடி**
