இந்தியர்களால் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஜூம்!

Published On:

| By Balaji

பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் மத்திய அரசின் எச்சரிக்கை ஆகியவற்றையும் மீறி ஜூம் (Zoom)செயலி இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் அதிகமுறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

சென்சார் டவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, உலகில் இந்த ஏப்ரல் மாதத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விளையாட்டு தொடர்பு அல்லாத செயலிகளில் அதிக முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது ஜூம் தான் என தெரியவந்துள்ளது. ஏப்ரலில் மட்டும் 131 மில்லியன் முறை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 ஏப்ரல் மாதத்திலிருந்து 60 சதவிகித அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது.

இந்த அபார வளர்ச்சி காலகட்டத்தில் இந்த செயலியை அதிகமுறை பதிவிறக்கம் செய்ததில் அதிகபட்சமாக இந்தியர்கள் 18 சதவிகிதமாகவும் அமெரிக்கர்கள் 14 சதவிகிதமாகவும் உள்ளனர்.

ஏப்ரல் 16-ஆம் தேதி ஜூம் செயலியில் தனிநபர் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக கூறி இந்த செயலி பாதுகாப்பானது அல்ல, இதனை அரசு அதிகாரிகள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு கூறிய நிலையில் இந்த அபார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனமான ஜூம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு எடுப்பதற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களின் மீட்டிங்குகளை நடத்துவதற்கும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த செயலி தனது பாதுகாப்பு முறைகள் மற்றும் பாலிசிகளை மாற்றி அமைத்துள்ளது.

ஏற்கனவே பேஸ்புக், வாட்ஸ்அப் ,கூகுள், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய வீடியோ அழைப்புகளில் அழைக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர். அதிகமான நபர்களை அழைக்க முடிவதே ஜூம் செயலியின் முக்கிய அம்சமாக உள்ளது.

இந்தியாவில் குறிப்பாக இதற்காக எந்த ப்ரைவசி சட்டங்களும் இதுவரை உருவாக்கப்படவில்லை எனவும் ஜூம் செயலியை பதிவிறக்கம் செய்யும் போது ஏதாவது பிரைவசி பிரச்சினைகள் வரலாம். ஆனால் இது குறித்து எதுவும் செய்ய முடியாது ஏனென்றால் இது ஒரு தனியார் அமைப்பு மேலும் டேட்டாக்களை இந்த முறையில் தான் உபயோகப்படுத்த வேண்டும் என்ற சட்டம் எதுவும் இல்லை என தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் தொலைத்தொடர்பு கண்காணிப்பு மையத்தின் இயக்குநரான ஸ்மிதா கிருஷ்ண பிரசாத் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்து தகவல்களை வெளியிடும் ஆரோக்கிய சேது செயலியும் உலகில் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை 90 மில்லியன் மக்கள் அதை பதிவிறக்கம் செய்துள்ளதாக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த செயலி நெட்பிளிக்ஸ் மற்றும் வீடியோ கால் செயலிகளான கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகியவற்றை பின்தள்ளி உள்ளது. மிக வேகமாக இந்த காலகட்டத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக் செயலியும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

** – பவித்ரா குமரேசன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment