மகாவில் மீண்டும் பாஜக ஆட்சி: தாக்கரே பேரன் துணை முதல்வரா?

Published On:

| By Balaji

மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 24) நடைபெற்று வருகிறது.

ஆளும் பாஜக- சிவசேனா கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அடுத்த இடத்திலேயே இருக்கிறது.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடந்தது. இதில் தற்போதைய பாஜக முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பாஜக- சிவசேனா கூட்டணி தேர்தலை சந்தித்தது.

வாக்கு எண்ணிக்கையில் காலை 11 மணி நிலவரப்படி பாஜக- சிவசேனா கூட்டணி 177 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதில் பாஜக 106 இடங்களிலும் சிவசேனா 71 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் முன்னிலையில் இருக்கிறார்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 89 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. மற்றவர்கள் 21 தொகுதிகளில் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்.

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் குடும்பத்தில் இருந்து முதல் முறையாக வேட்பாளராக களமிறங்கிய ஆதித்ய தாக்கரே வொர்லி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார்.

தேர்தல் கூட்டணி அமைத்ததில் இருந்து தேர்தல் பிரச்சாரம் முடிந்த மறுநாள் வரை பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவிய நிலையிலும் இந்தக் கூட்டணியை காங்கிரஸ் கூட்டணியால் தோற்கடிக்க முடியவில்லை. காரணம் மகாராஷ்டிராவில் பாஜக அரசை எதிர்த்து சரத் பவாரை தவிர வேறு எந்த முன்னணித் தலைவரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.

சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே வெற்றிபெறும் நிலையில், அவருக்கு அரசில் முக்கியப் பதவி கேட்க சிவசேனா முடிவு செய்திருப்பதாக மகாராஷ்ராவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை முதல்வர் பதவியை ஆதித்ய தாக்கரேவுக்கு கொடுக்குமாறு சிவசேனாவின் கோரிக்கை இருக்கும் என்பதே நிலவரம்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share