காஞ்சிபுரம் மாவட்டம் சீதாபுரத்தில், 8 வழிச் சாலைக்கு நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள் தங்கள் நிலம் பறிபோவதாகக் கதறி அழுதனர். நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்.டி.ஓ மற்றும் வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக செல்லும் 8 வழிச்சாலைக்காக நிலம் அளவீடு செய்யும் பணி நேற்று முன்தினம் (ஜூலை 10) தொடங்கியது. சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக 59.1 கி.மீ. தூரம் சாலை செல்கிறது. காஞ்சிபுரத்தில் கரசங்கால், கொற்கைதாங்கல், ஒரத்தூர், நாட்டரசன்கோட்டை, வடக்குப்பட்டு உள்ளிட்ட 10 கிராமங்களில் நேற்று முன்தினம் காலை காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அலுவலர் ராஜூ தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் சர்வேயர் பரிமளம், தேன்மொழி உள்ளிட்ட 50 பேரும், தேசிய நெடுஞ்சாலைத் துறை அளவையாளர்களும், துண்டல் கழனி, வளையங்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நில அளவீடு செய்யும் பணியைத் தொடங்கினர்.
நில அளவையாளர்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் நிலத்தை அளந்து தோராய மதிப்பீட்டில் 70 மீ அகலத்துக்கு சாலை அமைய உள்ள இடத்தை முதல் குழுவினர் அளவீடு செய்தனர். இரண்டாவது குழுவினர் அளவீடு செய்யப்பட்டதை சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். மூன்றாவது குழுவினர் அளவீட்டை உறுதி செய்தனர். தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள், கல் நட்டு அந்த கற்களுக்கு வண்ணம் பூசி எண்களை எழுதினர்.
நிலம் அளவீடு செய்யும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி சந்திரசேகரன், பெரும்புதூர் ஏஎஸ்பி ராஜேஷ் கண்ணா தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 11) செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள குருவன்மேடு, பாலூர், அரும்புலியூர், ஆனம்பாக்கம், சீத்தனஞ்சேரி ஆகிய 5 கிராமங்களில் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. இன்று உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள மணல்மேடு, ஒழுகரை, இளநகர், பெருநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலம் அளவீடு செய்யும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றுடன் தொடர்ந்து மூன்றாவது நாளாக மக்களின் எதிர்ப்பையும் மீறி நிலம் அளவீடும் பணி காவல் துறை பாதுகாப்புடன் நடைபெற்றுவருகிறது.
�,