Z10% இட ஒதுக்கீடு: அலர்ட் ஆன ஸ்டாலின்

public

பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு அளித்து மத்திய அரசு சட்டம் இயற்றிய விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் அமைதியாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த சட்டத்தை தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கொள்கை அளவில் எதிர்க்கின்றன.

நாடாளுமன்ற மக்களவையில் அதிமுகவின் தம்பிதுரையும், மாநிலங்களவையில் கனிமொழியும் பொருளாதார இட ஒதுக்கீட்டை எதிர்த்து பேசிய பேச்சுகள் பெரிய அளவில் எதிரொலித்தன. அதிமுக அத்தோடு இதை முடித்துக் கொண்டது. ஆனால் திமுகவோ 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

இதற்கு மேலும் இந்த விவகாரத்தை திமுக கையிலெடுக்க இருந்ததாகவும் ஆனால் திமுக பிரமுகர்கள் மூலமாகவே இது தற்போது சற்று நிறுத்தப்பட்டிருப்பதாகவும் திமுகவில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

“ 10% இட ஒதுக்கீட்டை திராவிடர் கழகம் கடுமையாக எதிர்க்கிறது. இதுபற்றிக் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் ஆ.ராசா பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்தில் 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றங்கள் வழியாக செயல்படுவது, மக்கள் மத்தியில் பிரச்சாரம் – போராட்டம் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னையில் மாபெரும் பேரணி (தேதி பின்னர் அறிவிக்கப்படும்), துண்டறிக்கைகள் இயக்கம் நடத்துவது, தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரை இணைத்து நாடு தழுவிய அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லுதல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் அடிப்படையில் 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னையில் ஒருலட்சம் பேரைக் கூட்டி பேரணி நடத்த வேண்டும் என்றும் அதற்கு திமுக உதவ வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கி.வீரமணி ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதேநேரத்தில்தான் திமுகவின் சில மாவட்டச் செயலாளர்களும், மாநில நிர்வாகிகள் சிலரும் ஸ்டாலினை சந்தித்து களத்தின் நிலவரத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இதைக் கேட்ட ஸ்டாலின் குழப்பமாகி, 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பேரணியின் தேதியை சற்று பொறுமையாக முடிவு செய்யலாம் என்று சொல்லிவிட்டார்” என்கிறார்கள் திமுக தரப்பில்.

அப்படி என்ன சொன்னார்கள் திமுக நிர்வாகிகள் ஸ்டாலினிடம்?

“10% இட ஒதுக்கீட்டில் பிராமணர்களுக்கு மட்டும் பலன் கிடைக்கப் போவதில்லை. சைவப் பிள்ளைமார், சைவ முதலியார்கள், ரெட்டியார்கள், கிறிஸ்துவ பிள்ளைமார்கள்,கிறிஸ்துவ முதலியார்கள் என தமிழகத்தில் முன்னேறிய வகுப்பில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் இந்த விவகாரத்தில் திமுக மீது கசப்பாக இருக்கிறார்கள். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊராட்சி சபைகளில் கூட இந்த சலசலப்பைக் கேட்க முடிந்தது.

தவிர குமரி மாவட்டத்தில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் உட்பட பிள்ளைமார் அதிகம் உள்ள பகுதிகளில் அவர்களின் முத்தாரம்மன் கோயில் வாசல்களில், 10% இட ஒதுக்கீட்டுக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து போர்டுகள் வைத்திருக்கிறார்கள். பாஜக சார்பில் முன்னேறிய சாதிகளின் சங்கங்களைத் தொடர்புகொண்டு இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலையில் நாம் இந்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினால் முன்னேறிய வகுப்பினரில் உள்ள திமுக குடும்பங்களே கூட அதிருப்தி ஆகும் நிலை ஏற்படும். மேலும் வரும் மக்களவை, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வித்தியாசம் குறைவாகவே இருக்கக் கூடும் என்ற நிலையில் இந்த ரிஸ்க்கை நாம் எடுக்க வேண்டாம் என்று ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள். அதன் விளைவாக 10% விவகாரத்தில் திமுக சார்பான மாபெரும் மக்கள் போராட்டம் இப்போதைக்கு வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம் ஸ்டாலின்” என்று தெரிவித்தனர்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *