Zநான் என்பது மற்றவர்களுக்கானதல்ல!

public

ஒரு கப் காபி!

‘இம்ப்ரெஸ்’ என்ற ஆங்கில வார்த்தையின் பின்பாதியில் இருக்கும் ‘ப்ரஸ்’ என்ற வார்த்தைக்கு அழுத்துதல் என்ற பொருள் உண்டு. மற்றவர்களை இம்ப்ரெஸ் செய்வதற்காகச் செய்யும் எல்லா விஷயங்களும் நம் மனதை அழுத்தத்துக்கு உட்படுத்தி வெளிப்படுபவைதான். கண்டிப்பாக, அதில் நம்முடைய முற்று முழுதான இயல்பு வெளிப்படாது.

பதின்வயதில் எதிர்ப்பாலினத்தவரின் கவனத்தைத் திருப்ப மெனக்கெடுவது பெரும்பாலான ஆண், பெண்களின் இயல்பு. முடிக்கற்றைகளை, ஆடை மடிப்புகளைப் பெண்கள் சரிப்படுத்துவார்கள் என்றால், மறுபக்கம் ஆண்கள் சாகச வீரர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ள முயல்வார்கள். காலந்தோறும் இந்த வழக்கங்கள் மாறினாலும், எதிர்ப் பாலினத்தவரை ஈர்க்கும் முயற்சிகள் புதிது புதிதாகக் கண்டறிந்து பின்பற்றப்படுகின்றன என்பதில் மாற்றமில்லை.

நற்பெயர் பெறவோ, நட்பு பாராட்டவோ, உதவிகள் கிடைக்கவோ அல்லது காரணமற்ற ஒரு காரணத்துக்காகவோ எதிரில் உள்ளவரின் கவனத்தை ஈர்ப்பது அவசியமாகிறது. இதைச் சரியாகச் செயல்படுத்துபவர்கள், வாழ்வின் பாதியிலேயே சாதனையாளர் ஆகின்றனர். முயற்சி செய்துத் தோல்வியடைபவர்கள் அனுபவங்களைப் பத்திரப்படுத்திக்கொள்கின்றனர். மாறாக, எந்த விதத்திலும் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்ளாமல் தீர்க்கத்துடன் இருப்பவர்களும் உண்டு. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் உற்று நோக்காமல், பெரிதாக எந்தவித கவன ஈர்ப்புத் தருணங்களும் அற்று வாழ்ந்து தீர்ப்பவர்கள் இப்போதும் உண்டு.

பெரும்பாலானோர் பின்பற்றும் வாழ்க்கைச் சித்தாந்தங்களின்படி, இவர்கள் நிகழ்காலத்தில் தோல்வியாளர்கள். ஆனால், இயல்பின் வழி செல்லுதல் என்ற அடிப்படையில் இவர்கள் மாபெரும் வெற்றியாளர்கள். எந்தக் குறையும் அவமானமும் வலியும் வேதனையும் சரிவும் இவர்களது மனக்கோட்டையைச் சேதப்படுத்தாது.

எத்தனை முறை நாம் மற்றவர்களுக்காக இயல்பில் திரிந்து செயலாற்றியிருப்போம்? சுற்றியிருப்பவர்களின் சிரிப்பொலி பெருக, யார் யாரையெல்லாம் கிண்டல் செய்திருப்போம். மற்றவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, நம்மைச் சார்ந்திருப்பவரைக் கைவிட்டிருப்போம். அதிலிருந்து விலகி, நமது அகத்தின் இயல்பை வெளிப்படுத்தி வாழ்ந்திருப்போம்?

வலியோரைப் புகழ்வதும் எளியோரை இகழ்வதும் இயல்பென்றாகிவிட்ட உலகில், இதற்குப் பதில் அறிவது தேவையற்றது. தவற்றைத் திருத்திக்கொள்ள வழி தெரியாமல், குற்றவுணர்ச்சியில் குமையாமல் விடுபட வேண்டுமானால், நம் கவலைகளின் பட்டியல் குறைய வேண்டுமென்று நினைத்தால், ‘நான் மற்றவர்களுக்காகச் செயல்படுகிறேனா, இயல்பில் பொருந்தி நிற்கிறேனா’ என்பதற்கு விடை தேட வேண்டும்.

மற்றவர்கள் பாராட்டுக்காக, புன்னகைக்காக, பெருமைக்காகச் செய்யும் எந்த விஷயமும் நெகிழித்தன்மை கொண்டதுதான். இதை உணர்ந்துகொண்டால், நம்மை நினைத்து நாமே கவலைப்படும் தருணங்கள் காணாமல் போகும்!

**- பா.உதய்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *