zஅரசு மருத்துவமனை மரணங்கள் : தவறு செய்தது யார்?

public

புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மார்ச் 9ஆம் தேதி முன்னாள் முதல்வர் ரங்கசாமி தொகுதியான கதிர்காம்பம் பகுதியைச் சேர்ந்த அம்சா, சுசிலா, கணேசன் மூவரும் கிட்னி பாதிப்பால் டயாலிசிஸ் சிகிச்சை செய்துகொண்டிருந்தபோது பரிதாபமாக இறந்தனர்.

தகவல் தெரிந்த பகுதிமக்கள் அரசு மருத்துவக் கல்லூரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மரணத்துக்குக் காரணம் மின்சாரத் தடை, ஜெனரேட்டர் ஓடவில்லை, சுவிட்ச் கோளாறு என பலரும் பலவிதமாக பேசினார்கள்.

சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உடனடியாக இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிதி வழங்கப்படும், மரணம் குறித்து விசாரனை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

அதோடு இல்லாமல், மக்கள் கோபத்தைத் தணிக்க பணியிலிருந்த ஒரு மருத்துவர், 5 செவிலியர், ஒரு டெக்னிக்கல் அசிஸ்டண்ட் உட்பட 7 பேரை சஸ்பெண்ட் செய்தார்.

மரணத்துக்கு காரணமானவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், இறந்தவர்களின் பிரேதப் பரிசோதனையை ஜிப்மர் மருத்துவமனையில் செய்ய வேண்டும் என்று உறவினர்களும் பொதுமக்களும் கோரிக்கைவைத்தனர்.

அதேபோல் ஜிப்மர் மருத்துவமணையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கோரிமேடு காவல் நிலையத்தில் சந்தேக மரணமாக வழக்கு பதிவும் செய்யப்பட்டது.

மார்ச் 10இல் என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக மருத்துவக் கல்லூரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் நிதி வழங்க வேண்டும், இறந்தவர்கள் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை ஆணை கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடந்தது. இருந்தாலும் மூன்று நபர்களும் கடைசிவரை எப்படி இறந்தார்கள் என்பதை மட்டும் அரசு விளக்கவில்லை. இதனால் இதுகுறித்து அறிய புதுச்சேரி சுகாதரத்துறை இயக்குநர் ராமனிடம் தொடர்புகொண்டு பேசினோம் அவர் மருத்துவக் கல்லூரி இயக்குநர் கோவிந்தராஜிடம் கேளுங்கள் என்று அவரது கைபேசி எண் கொடுத்தார்.

நாம் கோவிந்தராஜை தொடர்புகொண்டு மின்னம்பலம்.காம் மொபைல் பத்திரிகை நிருபர் என்று அறிமுகத்துடன், மூவர் மரணம்பற்றி கேட்டோம். ‘சார், விசாரணை நடந்துகொண்டிருக்கு, விசாரணை முடிந்தபிறகு முழுமையாகச் சொல்கிறோம்’ என்றார்,

சார், மின் தடை ஏற்பட்டதா?

ஆமாம் சார். மின் தடை ஏற்பட்டது என்றார். சரி சார், மின் தடை ஏற்பட்டால், அந்த மிஷினில் 15லிருந்து 20 நிமிடத்துகான பவர் பேக்கப் இருக்கும். அந்த சுவிட்ச்sஐ அழுத்தினார்களா! அதுவும் இல்லையென்றால், அந்த மிஷினில் இரண்டாவது சுவிட்ச் அழுத்தினால், உடலிலிருந்து மிஷினுக்குச் சென்ற ரத்தம், உப்பு நீர், தண்ணீர் அணைத்தும் உடம்புக்கு மீண்டும் சென்றுவிடுமல்லவா? என்று ஒரு சில சந்தேகங்களைக் கேட்டோம்

‘விசாரனையில் இருக்கு இதுகுறித்து பேச வேண்டாம்’ என்றார்.

தொடர்ந்து நாம் ‘ இயந்திரங்கள், யூ.பி.எஸ், அல்லது ஆன் லைன் யூ.பி.எஸ், இருக்கிறதா, ஜெனரேட்டர் நல்லநிலையில் இருந்ததா?’ என்று கேட்டோம்.

“சார், இரண்டு ஜெனரேட்டர் இருக்கிறது. இரண்டும் நல்லநிலையில் உள்ளது.

யூ.பி.எஸ். ஆன்லைன் யூ.பி.எஸ். அனைத்தும் இருக்கு, மிஷினும் ஓடிகிட்டேதான் இருந்தது எப்படி நடந்தது இந்த விபத்து என்று அனைவரும், மண்டையையை பிச்சுகிட்டுயிருக்கோம்” என்றார்.

தொடர்ந்து, சார் மிஷின் சப்ளை செய்த கம்பெனி ஆண்டுதோறும் சரியாக வந்து சர்வீஸ் செய்திருகிறார்கள்களா? மிஷின் வாங்கி இதுவரை எத்தனை டயாலிசிஸ் செய்திருக்கிறார்கள்” என்றோம்.

‘6 மிஷின் வாங்கி 1 ½ லட்சம் டாயலிசிஸ் செய்திருப்போம். சார்… விசாரணை முடிந்து பேசுகிறேன்’ என்று, நன்றி சொல்லி முடித்தார்.

இரண்டு ஜெனரேட்டர் உள்ளது, ஆன்லைன் யூ.பி.எஸ், யூ.பி.எஸ், அனைத்துக்கும் டெக்னீஷியன் இருக்கிறார். மிஷினும் நல்ல நிலையில் இருந்துள்ளது.

டெக்னீஷியன் தகுதிவாய்ந்த செவிலியர்கள் இருந்துள்ளார்கள். ஆனாலும் மூன்று டாயலிசிஸ் செய்த மூன்று நோயாளிகள் மரணமடைந்திருக்கிறார்கள்.

‘டயாலிசிஸ் மிஷின் ரூ.8 லட்சம் முதல் 12 லட்சம் வரையில் நல்ல மிஷின் உள்ளது. அந்த மிஷின் சப்ளை செய்யக்கூடிய நிறுவனம் ஆண்டுதோறும் சர்வீஸ் செய்துகொடுக்க ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். மருத்துவ அதிகாரி தினந்தோறும் மிஷினை பரிசோதனை செய்ய வேண்டும், நிச்சயமாக மிஷின் கோளாறுதான்’ என்றார், அங்கு பணியிலிருந்த மனசாட்சியுள்ள ஒரு மருத்துவர்.

சிபிஐ-எம் மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், ‘காங்கிரஸ் ஆட்சி வந்தவுடனே டயாலிசஸ் மிஷின் வேலை செய்யவில்லை எனவே, அதை சர்வீஸ் செய்ய வேண்டும் அல்லது புதிய மிஷின் வாங்க வேண்டும் என மருத்துவக் கல்லூரி பரிந்துரை செய்தது. ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அதற்கு நிதி ஒதுக்கவில்லை. மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்கு நிதி ஒதுக்காமல் இருந்தது அமைச்சர் செய்த தவறு.மூவர் மரணத்துக்கு காரணம் அமைச்சர்தான் காரணம் ஏழைகளின் மரணத்துக்கு காங்கிரஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து கேட்க, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அவர்களை பலமுறை தொடர்புகொண்டும் கைபேசியை எடுக்கவில்லை.

ஏழைகளின் உயிர்களிலா அரசு விளையாடுவது?

-எம்.பி.காசிநாதன்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *