கடந்த 2007ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு, 11 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 4) அறிவிக்கப்பட்டது.
ஹைதராபாத்தின் லும்பினி பார்க் மற்றும் கோகுல் சாட்ஆகிய இடங்களில், கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் 44 பேர் உயிரிழந்தனர். சுமார் 68க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
தில்சுக் நகரில் வைக்கப்பட்ட மூன்றாவது குண்டை, அது வெடிப்பதற்கு முன்னரே காவல் துறையினர் பாதுகாப்பாகக் கண்டறிந்து அகற்றினர். பல உயிர்களைப் பலி வாங்கிய இந்தியாவினை உலுக்கிய இச்சம்பவத்துக்கு, இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகளே காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது.
2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அனீக் ஷாஃபிக் சையத், முகமது சாதிக், அக்பர் இஸ்மாயில்சௌத்ரி மற்றும் அன்சார் அகமது ஷேக் ஆகிய நால்வரையும் மஹாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்பு போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை, பயங்கரவாதம், சதி உள்ளிட்ட பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு செர்லப்பள்ளி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் 170 சாட்சியங்களிடம் விசாரணை செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை ஹைதராபாத் நம்பல்லி நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. ஆனால் வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்து நம்பல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் குண்டுவெடிப்பு நடந்து 11 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் அனீஷ் ஷாஃபிக் மற்றும் இஸ்மாயில் சௌத்ரி ஆகிய 2 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டதாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
�,”