நடிகை ஹன்சிகா நடிக்கும், கதாநாயகியை மையமாக வைத்து உருவாகக் கூடிய திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பிரபுதேவாவின் குலேபகாவலி படத்திற்குப் பிறகு நடிகை ஹன்சிகா கைவசம் விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை, அதர்வாவின் 100, அறிமுக இயக்குநர் ஜமீல் படம் என மூன்று படங்கள் உள்ளன. இதில் ஜமீல் இயக்கவுள்ள படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகவிருக்கிறது. இவர் இயக்குநர் லக்ஷ்மனிடம் ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
இதுகுறித்து இயக்குநர் ஜமீலிடம் தொடர்புகொண்டு பேசியபோது, “ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இந்தப் படத்தை ஜியோஸ்டார் என்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தின் டைட்டில் ரோலில் ஹன்சிகா நடிக்கிறார். இந்தப் படத்தில், ஹன்சிகா தவிர முன்னணி நடிகர்கள் இருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள். தற்போது படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டுவருகிறோம். வருகிற ஆகஸ்ட் மாதம் முடிவில் தொடங்கத் திட்டமிட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பை சென்னை, ஜார்ஜியா மற்றும் மொரிஷியஸ் ஆகிய இடங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தற்போது இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் விவரங்களைக் கூடிய விரைவில் வெளியிடவிருக்கிறோம்” என்றார்.
விஸ்வரூபம்-2, எம்.ராஜேஷ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும் ஆண் தேவதை, விஷ்ணு விஷால் நடிக்கும் ராட்சஸன் முதலான படங்களுக்கு இசை அமைத்து வரும் ஜிப்ரான், ஹன்சிகா நடிக்கும் படத்திற்கு இசை அமைப்பது இதுவே முதன்முறையாகும்.�,