zஸ்டாலின் பிறந்தநாள்: திமுகவினர் கொண்டாட்டம்!

Published On:

| By Balaji

திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் 65வது பிறந்தநாளை திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். ஸ்டாலினுக்கு நேரிலும் தொலைபேசியிலும் பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் 65வது பிறந்தநாள் விழா இன்று திமுகவினரால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் தனது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய ஸ்டாலின், அதைத் தொடர்ந்து வேப்பேரியிலுள்ள பெரியார் நினைவிடம், மெரினாவிலுள்ள அண்ணா நினைவிடம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் தலைமைக் கழக நிர்வாகிகள் சூழ மீண்டும் ஒருமுறை கேக் வெட்டிய ஸ்டாலின், தொண்டர்களின் வாழ்த்துகளை ஏற்று வருகிறார். அவருக்கு ரூபாய் நோட்டு, ஏலக்காய் மாலைகள், சால்வைகள், பூங்கொத்துகள், புத்தகங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆளுயர மாலைகள், மலர்கிரீடம் உள்ளிட்டவை சகிதம் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இன்று காலை ஸ்டாலினைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இன்று பிறந்தநாள் காணும் திமுக செயல் தலைவர் சகோதரர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக பாஜக சார்பில் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “‘தி.மு.க. எனும் ஆலமரத்தின் பலமான விழுதாக ஸ்டாலின் உள்ளார். மத்திய, மாநில அரசிடமிருந்து தமிழக உரிமைகளை மீட்டெடுக்கும் பொறுப்பு ஸ்டாலினுடையது. களம் பல காண வேண்டும்”என்று கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், அன்புச் சகோதரர் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது உளமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

புதுவை முதல்வர் நாராயணசாமி, ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்தார். ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக-மதிமுக இடையே ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களுடைய எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்று ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் வெளியேற்ற வேண்டும், எனவே பாஜக, அதிமுகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும், திமுகவினர் ஒருங்கிணைந்து மக்களிடத்தில் பிரசாரம் செய்யவேண்டும் அதுவே என் பிறந்தநாள் விருப்பம் என்று ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

திமுக சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ட்விட்டர் பக்கத்தில் #HBDMKSTALIN , #HBDMKStalin66 போன்ற ஹாஸ்டேக்குகள் ட்ரெண்டில் இடம் பிடித்துள்ளன.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel