தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை சந்திரசேகர ராவ் இன்று தாக்கல் செய்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்கின்றன. பாஜகவும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது.
**சந்திரசேகர ராவ் வேட்புமனு தாக்கல்**
சந்திரசேகர ராவ், தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா சாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கடந்த 1985ஆம் ஆண்டு முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டதில் இருந்து தொடர்ந்து வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக இக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாமி தரிசனம் செய்தப் பின்னர் கஜ்வெல் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை சந்திரசேகர ராவ் தாக்கல் செய்தார்.
**காங்கிரஸ் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில்**
தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த` 12ஆம் தேதி காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்தது. 65 பேர் இப்பட்டியலில் இடம் பிடித்திருந்தனர். இந்நிலையில், 10 வேட்பாளர்களின் பெயர் அடங்கிய 2ஆம் கட்ட பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
**சர்ச்சையை ஏற்படுத்திய பிங்க்**
டிஆர்எஸ் கட்சியின் சின்னம் மற்றும் கொடிகள் ஆகியவை பிங்க் நிறத்திலேயே உள்ளது. அக்கட்சியின் நிறமாகவே பிங்க் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஒட்டுவதற்காக வாக்குச்சீட்டுகள் இந்த முறை பிங்க் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய 90 லட்சம் வாக்குச்சீட்டுகள் பிங்க் வண்ணத்தில் அச்சிடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. பிங்க் வண்ண வாக்குச் சீட்டுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் கண்டன குரல் எழுப்பி வருகின்றன.�,”