கிருஷ்ணகிரியில் உள்ள கந்திக்குப்பம் என்னும் பகுதியில் இன்று (செப்,3) கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் பெண் உள்பட நால்வர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகில் உள்ள கந்திக்குப்பம் பகுதியில், சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சாலையை கடக்க முயன்றனர். அவர்கள் மீது மோதாமல் இருக்க, கார் டிரைவர் ப்ரேக் போட்டுள்ளார். அப்படி இருந்தும் , கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி, பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீதும் மோதியது.
இதையடுத்து, கார் டிரைவர் அங்கே இருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும், சாலையில் நின்று கொண்டிருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த கார் மீது மண்ணெணெய் ஊற்றி தீ வைத்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால், மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், மக்கள் அந்த பேச்சு வார்த்தைக்கு ஒத்து வராததால் போலீசார் தடியடி நடத்தி அந்த இடத்திலிருந்து மக்களை அப்புறப்படுத்தினர்.
பின்னர், விபத்தில் பலியான பரத்குமார் (17), கோகுல் (18), வனஜா (48), தர்மர் (40) ஆகியோரின் உடல்களை போலீசார் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிதியுதவியாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.�,