zவிதிமீறிய பாஜக, காங்: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published On:

| By Balaji

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி ராணுவ வீரர்களின் படங்களைப் பயன்படுத்திய பாஜக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராணுவ வீரர்களின் படங்களைத் தேர்தல் பிரச்சாரங்களில் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மார்ச் 9ஆம் தேதி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தியது. இந்த உத்தரவை மீறி செயல்படும் அரசியல்வாதிகளைத் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிகளையும் மீறி பாஜக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ராணுவ வீரர்களின் படத்தை ராஜஸ்தானில் பிரச்சாரத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

மார்ச் 12ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், எம்.பி ராம்சரண் போஹ்ராவின் புகைப்படம் போடப்பட்ட பாஜகவின் விளம்பரப் பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பதாகையில் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் குறிபார்த்து சுடுவது போன்ற பெரிய படம் இருந்தது. மேலும், நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றோம் என்று இந்தியில் எழுதப்பட்டிருந்தது. இந்தப் பதாகையின் மேல் பகுதியில் மோடி படமும் இருந்தது. அதேபோல காங்கிரஸ் கட்சித் தலைவர் சுனில் ஷர்மாவும் தேர்தல் விதிகளை மீறி ராணுவ வீரர்கள் படத்தை விளம்பரப் பதாகைகளில் பயன்படுத்தியதாக *தி இந்தியன் எக்ஸ்பிரஸ்* ஊடகம் மார்ச் 12ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து இருவருக்கும் ராஜஸ்தான் மாவட்டத் தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ராணுவ வீரர்களின் புகைப்படங்களை விளம்பரப் பதாகைகளில் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு இருவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த டெல்லி சட்டமன்ற உறுப்பினர் ஓம்.பிரகாஷ் ஷர்மா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விங் கமாண்டர் அபிநந்தன் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அந்தப் படங்களை நீக்கக் கோரி தேர்தல் ஆணையம் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது. அந்தப் படங்களைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பதிவிட்டதாக ஓம்.பிரகாஷ் ஷர்மா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share