�
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 50 கோடியாக இருந்துள்ளது. ஆக, உலகத்தில் அதிகமான இணையம் பயன்படுத்தும் மக்கள் தொகைக் கொண்ட நாடுகளில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும், நுகர்வோரின் விருப்பங்கள் மாறிவருவதாலும், மக்களின் வருமானம் உயர்ந்துள்ளதாலும் ஆன்லைன் வர்த்தகத் துறை வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது.
2014ஆம் ஆண்டு தொடங்கி கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய ஆன்லைன் வர்த்தகத் துறை சீரான வளர்ச்சியைக் கண்டுள்ளது. தற்போது இந்திய ஆன்லைன் வர்த்தகத் துறையின் மதிப்பு 53 பில்லியன் டாலராக உள்ளது. 25 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்திய ஆன்லைன் வர்த்தகத் துறையின் மதிப்பு 2020ஆம் ஆண்டில் 100 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் டிராவல் ஏஜன்சிகள், ஆன்லைன் டிக்கட் சேவைகள், உணவு டெலிவரி சேவைகள், டாக்ஸி சேவைகள் போன்ற துறைகள் கடந்த சில ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்ததுடன் சந்தையும் விரிவடைந்துள்ளது.
மளிகைச் சரக்குகள் விற்பனை, ஆடைகள் மற்றும் ஃபேஷன் பொருட்கள் விற்பனை, ஆன்லைன் சில்லறை வர்த்தகம் போன்ற துறைகளில் எதிர்காலத்தில் நல்ல ஆற்றல் வளம் உள்ளது. உள்ளூரில் பிரத்தியேக சேவைகள் வழங்குதல், மருந்துகள் டெலிவரி போன்ற துறைகள் சிறப்பாக வளர்ந்து வருகின்றன. ரியல் எஸ்டேட் விளம்பரங்களுக்கு நல்ல சந்தை கிடைத்துள்ளது. மேலும் இத்துறை நல்ல வளர்ச்சியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.�,