பஞ்சாப் மாநிலத்தை காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடாக அறிவிக்கக்கோரி ஏராளமான சீக்கியர்கள் லண்டனில் நேற்று (ஆகஸ்ட் 12) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாப் மாநிலத்தைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரிட்டன் நாட்டில் உள்ள பல சீக்கிய அமைப்புகள் நேற்று லண்டனில் மாபெரும் பேரணி நடத்தின. ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ (Sikhs For Justice) என்ற சீக்கிய அமைப்புகளின் கூட்டணி சார்பில் லண்டன் நகரில் உள்ள டிராஃபால்கர் சதுக்கத்தில் இந்த பேரணி நடைபெற்றது.
பேரணியில், இந்தியாவில் இருந்து பஞ்சாபை பிரித்து காலிஸ்தான் என்ற தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் இதற்கான வாக்கெடுப்பை 2020க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக, இந்தப் பேரணியை அனுமதிக்கக்கூடாது என இந்தியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும், சட்டத்திற்கு உட்பட்டு தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த மக்களுக்கு உரிமை உள்ளது என பிரிட்டன் அரசு பேரணிக்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
காலிஸ்தான் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய அரசை வாழ்த்தியும் போட்டி பேரணி லண்டனில் நடத்தப்பட்டுள்ளது. பாஜக கடல் கடந்த நண்பர்கள் உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தப் பேரணியை நடத்தினர். காலிஸ்தான் ஆதரவு பேரணிக்கு அனுமதி அளித்ததன் மூலம் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுக்கு பிரிட்டன் மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது என்று பாஜக கடல் கடந்த நண்பர்கள் அமைப்பின் தலைவர் குல்தீப் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, சீக்கிய மதத் தலைவரான குரு நானக்கின் 550ஆவது பிறந்த நாளை இந்திய தூதரகங்கள் விமர்சையாக கொண்டாடும் என்று வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார். காலிஸ்தான் ஆதரவு பேரணியின் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையாகவே சுஷ்மாவின் அறிவிப்பு பார்க்கப்படுகிறது.�,