ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதால் படம் பற்றிய முக்கிய அறிவிப்புகள் வெளியாகிவருகின்றன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டாலும் தொடர்ந்து நடிப்பேன் என ரஜினிகாந்த் அறிவித்திருந்ததால் அவரது அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினிகாந்தை கதாநாயகனாகக் கொண்டு படம் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியது. இந்தப் படத்தின் நாயகியாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த போது நயன்தாரா நடிப்பது முடிவானது.
பேட்ட படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசைக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. இளம் இசையமைப்பாளரான அனிருத் ரஜினிகாந்துடன் பணியாற்றிய முதல் படத்திலேயே அனைத்து பாடல்களையும் ஹிட் கொடுத்தார். தற்போது மற்றொரு முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்கு இசையமைத்துவருகிறார். இதனால் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்திற்கும் அனிருத்தையே ஒப்பந்தம் செய்தனர்.
அதே போல் படத்தின் ஆடை வடிவமைப்பாளராக பேட்ட படத்தில் பணியாற்றிய நிஹாரிகா பாசின் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தகவலை நிஹாரிகா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கபாலி படத்திற்காக ஏர் ஏசியா விமானத்தில் ரஜினியின் படத்துடன் விளம்பரம் செய்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்தியில் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரான நிஹாரிகா லஞ்ச் பாக்ஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.�,