யாரையும் குறிவைத்து விமர்சிக்க வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன், பொங்கல் வெளியீடு என்று படக்குழு அறிவித்திருக்கிறது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படம் பொங்கலுக்கு வெளிவருவதற்குத் தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியான படம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன். யுவன் இசையமைத்த இந்தப் படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சனாகான் போன்றோர் நடித்தார்கள். சிம்பு மூன்று விதமான கெட்டப்களில் நடித்தார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் [மைக்கேல் ராயப்பன்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/09/20/3) சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி அறிக்கை வெளியிட்டார். இதனால் இப்பிரச்சினையைத் தீர்த்த பிறகு வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் கவனம் செலுத்துமாறும் அதுவரை படத்தை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சிம்புவிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதனால் இந்தப் படத்தின் வெளியீட்டு நேரத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் பரவின. இதனையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், அதன் தலைவர் விஷாலுக்கும் எதிராக சிம்பு ரசிகர்கள் பலரும் வீடியோக்கள், மீம்ஸ்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக சிம்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “எனது ரசிகர்களுக்கும் என்னை நேசிப்பவர்களுக்கு ஓர் அழுத்தமான வேண்டுகோள். திரைத் துறையில் அண்மையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து வருந்தாதீர். எந்த ஒரு தனி நபரின் முடிவும் நம்மை ஓரங்கட்டிவிட முடியாது. எந்த முடிவாக இருந்தாலும் அது குழு உறுப்பினர்களால் கவுன்சில் உறுப்பினர்களால் எடுக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம். அதனால் பதற்றப்பட வேண்டாம். யாரையும் குறிவைத்து விமர்சிக்க வேண்டாம். எப்போதுமே அன்பைப் பரப்புங்கள். உங்களது தொடர் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நாம் நமது கடமையைச் செய்வோம். தானாக வழி பிறக்கும். பொங்கலுக்கு எப்படியும் திரைக்கு வருவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.�,