ரகுல் ப்ரீத் சிங் ஏற்கெனவே இந்தியில் பிஸியாக இயங்கிவரும் நிலையில் மீண்டும் ஒரு இந்திப் படத்தில் நடிக்கவுள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கி கோலிவுட்டில் அதிர்வை ஏற்படுத்திய ஒரு படம் 7ஜி ரெயின்போ காலனி. தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படம் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. அந்தப் படத்தில் சோனியா அகர்வாலின் ரோலில் நடித்ததன் வாயிலாக சினிமாவுக்கு என்ட்ரி ஆனார் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் சோனியா அகர்வால் கவனம் பெற்றதைப் போலவே ரீமேக்கில் ரகுலும் கவனம் பெற, அதன்பின்னர் டாப் கியரில் தனது பயணத்தைத் தொடங்கி தமிழ், தெலுங்கு, இந்தி எனத் தற்போது செம பிஸி காட்டிவருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.
2014இல் தனது முதல் இந்திப் படத்தில் நடித்த அவர் தற்போது தே தே ப்யார் தே படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், மீண்டும் ஓர் இந்திப்படத்தில் தான் நடிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார் ரகுல். அந்த வகையில் இயக்குநர் மிலாப் ஸாவேரி இயக்க, சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் நடிக்கும் மர்ஜவான் எனும் படத்தில் அவர் நடிக்கவுள்ளார். பூஷன் குமார் மற்றும் நிக்கில் அத்வானி இதைத் தயாரிக்கின்றனர்.
இது இப்படியிருக்க, சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே, கார்த்தியுடன் தேவ், சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என தமிழில் முன்னணி நடிகர்களுடனும் அவர் நடித்துவருகிறார். சில நடிகைகள் தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியாக இருப்பார்கள், இன்னும் சிலர் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக இருப்பார்கள். ஆனால் தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் மூன்றிலும் பிஸியாக நடிக்கும் நடிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தப் பட்டியலில்தான் தற்போது இணைந்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.�,