தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் நரேந்திர மோடிக்குத் தொழில் துறையினர் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, இதனால் தொழில் துறை வளர்ச்சி மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கத் தயாராகவுள்ளது. இந்த முடிவு தொழில் துறையினருக்கு மகிழ்ச்சியளிப்பதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பின் தலைவரான சந்தீப் சோமானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசிய அவர், “மத்தியில் ஆளும் அரசு நிலைத் தன்மையுடனும் தொடர் ஆட்சியிலும் இருந்தால் பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் சிறப்பாக மேற்கொள்ள இயலும். ஜிஎஸ்டி, ரியல் எஸ்டேட் சட்டம், வங்கி திவால் சட்டம் ஆகியவற்றை மேலும் சிறப்பாக்க இயலும்.
முதலீடுகளை அதிகப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை மேம்படுத்துவதும் அவசியமாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை உயர்த்துவதால் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதோடு, கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகளின் இன்னல்களைப் போக்கவும் இயலும். எனவே, அடுத்து வரும் அரசு (மோடி அரசு) நுகர்வோர் செலவுகள் மற்றும் தனியார் துறையில் அதிக முதலீடு, ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.�,