தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது சியாங் ராய் மருத்துவமனை.
தாய்லாந்து நாட்டிலுள்ள தாம் லுவாங் குகையிலிருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங்க்குக்கு, சியாங் ராய் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக மீட்கப்பட்ட 5 பேரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள சிறுவர்களின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்தாலும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் யாரும் அவர்கள் அருகே அனுமதிக்கப்படவில்லை. கண்ணாடிச் சுவருக்கு வெளியே நின்று பார்க்கவே, தாய்லாந்து அரசு அனுமதித்துள்ளது.
இது பற்றிப் பேசிய சியாங் ராய் மருத்துவமனை மருத்துவர் சயவேஜ் தனபய்சர்ன், சிறுவர்களுக்கு எந்த விதத் தொற்றுநோயும் ஏற்படாமல் தடுக்கவே அவர்கள் தனியாக வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். “மூன்று சிறுவர்களுக்கு மட்டும் சிறிய அளவில் நிமோனியா பாதிப்பு உள்ளது. அவர்களோடு சேர்த்து 12 பேரும் இன்னும் ஒரு வார காலத்தில் வீடு திரும்புவார்கள். வீட்டுக்கு அனுப்பப்பட்டாலும், சிறுவர்கள் அனைவரும் பழைய நிலைக்குத் திரும்ப ஒரு மாத காலம் ஆகும்” என்று கூறியுள்ளார்.
இன்னும் ஓரிரு நாட்களில், சிறுவர்கள் சிகிச்சை பெற்றுவரும் அறைக்குள் தகுந்த பாதுகாப்புக் கவசங்களுடன் பெற்றோர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது. மருத்துவமனையில் மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவரான டிதுனைப் பார்த்த அவரது தந்தை தனவத், சிஎன்என் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அதில், தன் மகனைக் கண்ணாடி வழியாகப் பார்த்ததும் அழுதுவிட்டதாகக் கூறினார். “நான் மட்டுமல்ல, எல்லா பெற்றோர்களும் அழத் தொடங்கிவிட்டனர். எனது மகனைக் காப்பாற்றிவர்களுக்கு, நான் நன்றி தெரிவிக்கிறேன். அவர்கள், அவனுக்குப் புதிய வாழ்க்கையை, மறுபிறப்பைத் தந்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
தாம் லுவாங் குகைக்குள் உணவில்லாமல் இருந்ததால், மீட்கப்பட்ட சிறுவர்களது எடை சுமார் 2 கிலோ குறைந்துள்ளது. புரோட்டீன் நிறைந்த உணவுகள் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இரண்டு வார காலம் குகைக்குள் இருந்தாலும், அவர்களது எடை பெரிதாகக் குறையாதது ஆச்சரியமளிப்பதாகக் கூறியுள்ளனர் தாய்லாந்து மருத்துவத் துறை அதிகாரிகள். குகைக்குள் செல்லும்போது சில உணவுப்பொருட்களை சிறுவர்கள் வாங்கிச் சென்றதாகவும், அதனைச் சரியான விகிதத்தில் அவர்கள் பிரித்து உண்டதே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்துள்ளனர். இது மட்டுமல்லாமல், குகையின் சுவர்களில் இருந்து கசியும் நீரையே சிறுவர்கள் குடித்துள்ளனர். சகதி நிரம்பிய நீரை அவர்கள் குடிக்காமல் இருந்ததற்கு, பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங் வழிகாட்டுதலே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
�,”