பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது கோவை மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிமன்றம்.
பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை ஆபாச வீடியோ பதிவு செய்து, அவர்களை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன் என்ற ரிஸ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டு, தற்போது கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டபோதும், மூன்றாவது நாளாக இன்றும் (மார்ச் 15) விசாரணை நடத்தினர் சிபிசிஐடி போலீசார். சபரிராஜன் வீட்டில் சுமார் 4 மணி நேரம் எஸ்பி நிஷா பார்த்திபன் தலைமையிலான தனிப்படை இன்று சோதனை மேற்கொண்டனர்.
பாலியல் புகார் தொடர்பாகக் கைதான திருநாவுக்கரசை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல் செய்தது சிபிசிஐடி தரப்பு. இந்த வழக்கு விசாரணை இன்று மாலை கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியதால், திருநாவுக்கரசை நீதிபதி முன் நேரில் ஆஜர்படுத்துவதில் போலீசாருக்கு சிக்கல் இருந்ததாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து, காணொலிக் காட்சி மூலம் திருநாவுக்கரசிடம் விசாரணை மேற்கொண்டார் நீதிபதி. இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காணொலி மூலம் விசாரிக்க வேண்டிய அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த நீதிபதி, “உளவுத் துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து திருநாவுக்கரசு காணொலிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டால் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்” என்று தெரிவித்தார். இதையடுத்து, திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதே நேரத்தில் திருநாவுக்கரசிடம் மனித உரிமை மீறல் கூடாது என்றும், அவருக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் தெரிவித்தார் நீதிபதி.�,