புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சென்டாக் பரிந்துரையின்படி மாணவர் சேர்க்கை நடைபெறாதது குறித்து மாநில சுகாதாரத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சென்டாக் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் 100ஆக இருந்தது. இதனை 150ஆக அதிகரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அதிகரிக்கப்பட்ட 50 இடங்களில் 33 இடங்கள் நிர்வாக இடங்களாகும். மீதமுள்ள 17 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என்பதால், சென்டாக் சார்பில் மாணவர்கள் பெயர் பட்டியல் அனுப்பப்பட்டது.
ஆனால், சென்டாக் விதிமுறைகளின்படி அங்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என மாணவர்கள் மற்றும் பெற்றோர் சார்பில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சென்டாக் பட்டியல் படி மாணவர் சேர்க்கை நடத்தாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு, புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் பிம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நடப்புக் கல்வியாண்டில் மட்டும் பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 இடங்களை நிரப்பிக்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. கடந்த 31ஆம் தேதி இரவு 7.32 மணிக்குப் புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் அனுப்பியுள்ள இமெயிலில், “கூடுதலாகப் பெறப்பட்ட 50 எம்பிபிஎஸ் சீட்டுகளுக்கு அங்கீகாரமற்ற முறையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது. நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.
ஆனால், ஹெல்ப் டெஸ்க் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், சென்டாக் பரிந்துரை செய்த பட்டியல்படி மாணவர் சேர்க்கை நடத்தவில்லை என்று தெரிய வந்துள்ளது. இது, இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை மீறிய செயலாகும்.
சென்டாக் அனுப்பிய 1 சீட்டுக்கு 10 மாணவர்கள் பெயர் கொண்ட பட்டியலின்படி நிர்வாக இடங்களுக்கும், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தனித்தனி கவுன்சிலிங் நடத்தி இருக்க வேண்டும். விதிகளை மீறியதற்காகக் கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.�,”