பாஜக நிர்வாகி கொல்லப்பட்டதற்கு மதப்பிரச்சினை காரணமல்ல என்று மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் திருச்சி மண்டலச் செயலாளர் விஜயரகு, காந்தி மார்க்கெட் பகுதியில் நேற்று காலை அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மொபைல்போன் பிரச்சினை தொடர்பான முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதுதொடர்பாக மிட்டாய் பாபு என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதனிடையே பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு விஜயரகுவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “விஜயரகுவின் குடும்பத்திற்கு இழப்பீடாக 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். மேலும், இந்தக் கொலைக்குக் காரணம் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி அமல்ராஜிடம், தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக இந்தக் கொலை நிகழ்ந்ததா அல்லது இந்து – முஸ்லிம் மோதலால் நிகழ்ந்ததா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். குற்றவாளிகள் யாரென்பதை அடையாளம் கண்டு கொண்டோம். அவர்கள் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள் கிடையாது. நாங்கள் விசாரித்தது வரை, மதத்தின் அடிப்படையில் இந்தக் கொலை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை” என்று பதிலளித்தார் ஐஜி.
யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், “குற்றவாளிகளில் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடந்த 10ஆம் தேதிதான் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். குற்றவாளிகளை கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலை நடந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ளன. மூன்று நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைவரையும் விரைவில் கைது செய்வோம்” என உறுதியளித்துள்ளார்.�,