சோனியா காந்தியின் முன்னாள் உதவியாளரும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான டாம் வடக்கன் இன்று பாஜகவில் இணைந்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியின் முன்னாள் உதவியாளருமான டாம் வடக்கன் இன்று (மார்ச் 14) பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மேலும், பாலகோட் விமானப் படைத் தாக்குதல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து டாம் வடக்கன் கடுமையாக சாடியுள்ளார். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் டாம் வடக்கன் பாஜகவில் இணைந்தார். பின்னர் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இதையடுத்து டாம் வடக்கன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் மிகவும் வேதனையில் இருக்கிறேன். அதனால்தான் இங்கு வந்திருக்கிறேன். நமது மண்ணில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதும், அதற்கு காங்கிரஸ் கட்சியின் எதிர்வினையும் மிகவும் வருத்தமளிக்கிறது.
பாலகோட் விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு மட்டுமே நான் கட்சியை விட்டு வெளியேற ஒரே காரணம். மிகவும் கனத்த இதயத்துடன் நான் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியுள்ளேன். தேசத்தின் நலனுக்கு எதிராக ஒரு கட்சி பணிபுரிந்தால் அக்கட்சியை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியே இல்லை. காங்கிரஸ் கட்சிக்காக எனது வாழ்வில் இரண்டு ஆண்டுகளை கொடுத்துள்ளேன். ஆனால் அக்கட்சியோ ஆட்களை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பழக்கத்தை பழகியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் குடும்ப அரசியல் உச்சத்தை தொட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார். டாம் வடக்கன் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். கேரளாவில் ஒரு மக்களவைத் தொகுதியில் டாம் வடக்கனை வேட்பாளராக பாஜக முன்னிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,