பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அடக்காவிட்டால் அவர்களின் புகலிடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அரசுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான்-பகிஸ்தான் எல்லையில் ஜெயிஷ் அல் அடல் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள், 10 ஈரான் எல்லை பாதுகாப்பு படையினரை கடந்த வாரம் சுட்டுக் கொன்றனர்.
இந்த எல்லைப் பகுதியில் பிரிவினைவாத கும்பல்களாலும், போதை மருந்து கடத்தல் கும்பல்களாலும் தொடர்ந்து அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இதுகுறித்து ஈரான் ராணுவ தலைவர் மேஜர் ஜெனரல் முகமது பகெரி கூறுகையில், “எல்லையில் இந்த தாக்குதல்கள் தொடர்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. பாகிஸ்தான் அதிகாரிகள் தங்கள் எல்லைகளை பாதுகாத்து, தீவிரவாதிகளை கைது செய்து, அவர்களில் புகலிடங்களை மூட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்தால், அவர்களில் புகலிடங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்துவோம்” என அவர் கூறினார்.
ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் முகமது ஜவத் ஷெரிப் கடந்த வாரம் பாகிஸ்தான் சென்றிருந்த போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பிடம் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு கூடுதலான பாதுகாப்பு படை எல்லையில் நிறுத்தப்படும் என பாகிஸ்தான் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.�,