கட்சி தொடங்குவதற்காக தனக்கு பணம் வரத் தொடங்கிவிட்டது என்றும், தற்போது அதனை வாங்குவது சட்டவிரோதம் என்றும் கூறியுள்ள நடிகர் கமல்ஹாசன், பணத்தைத் திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறேன் என்று விளக்கமளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்துவந்த கமல்ஹாசன், புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதகாவும் அறிவித்துள்ளார். கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் பேசிய கமல், அரசியலுக்கு வருவது உறுதி, கட்சி நடத்துவதற்கு பணம் தேவைப்படும் என்று கூறுகிறார்கள். ரசிகர்கள் நினைத்தால் பணம் தந்து விடுவார்கள். எனவே அரசியல் கட்சி தொடங்குவது குறித்து எனக்கு பயமில்லை என்றும், கட்சி தொடங்க ரசிகர்களிடம் பெறப்படும் பணத்திற்காக ‘மைய்யம் விசில்’ செயலி பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் இன்று ( நவம்பர் 16) ஆனந்த விகடன் இதழில் எழுதும் தொடரில் இதுகுறித்து கமல் விளக்கமளித்துள்ளார். அதாவது, “கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள் என்ற நான் கூறியதற்கு பதிலாக ரசிகர்கள் கொடுப்பார்கள் என்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இப்படி விளக்கம் சொல்வதிலேயே என்னை தாமதப்படுத்துகிறார்கள்.
தற்போது எனக்கு கடிதங்கள், பணம் ஆகியவை வரத் தொடங்கிவிட்டன. ஆனால் இப்போது அதனை வாங்கினால் சட்டவிரோதம், வாங்கி சும்மாவும் வைத்திருக்கக் கூடாது, அதனால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் திருப்பியனுப்புகிறேன்.
இதனால் வாங்க மாட்டேன் என்று அர்த்தம் கிடையாது, சரியான கட்டமைப்பு இல்லாமல் பணத்தை தொடக் கூடாது. இந்த பணம் என்னுடைய என்று நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள், அதற்குள் பணம் செலவாகிவிட்டால் உங்களிடமிருந்து பெறுவதற்கு எனக்கு பாக்கியமில்லை என்று நினைத்துக் கொள்கிறேன்”
என்று குறிப்பிட்டுள்ளார்.�,”