இன்று (மே 28) உலக பசி தினம்
கிரேசி கோபால்
“திரும்பத் திரும்ப பிக்பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்றியே, நீ திருந்தவே மாட்டியா?” என்று கேட்ட நீதிபதியிடம், எத்தனை முறை பிக்பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டணைய திரும்ப திரும்ப தர்றீங்களே, சட்டத்த எப்பதான் திருத்தப்போறீங்க என்று கேட்டான் மாரியப்பன் என்ற கைதி.
பதிலேதும் சொல்ல முடியாத நீதிபதி தண்டணையை அறிவித்துவிட்டு ஜெயிலரைத் தனியே அழைத்துப் பேசினார்.
அடுத்த நாள் ஜெயிலர் பிக்பாக்கெட் அடித்த 10 பேரை ஒரு இடத்தில் தனியாக வைத்தார். அவர்களுக்குச் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
உங்களுக்கு தினமும் இலவச சாப்பாடு கிடையாது. உழைத்து சம்பாதிக்க வேண்டும். தினமும் 200 ரூபாய் சம்பளம். இங்குள்ள கேண்டீனில் டிபன் ஐம்பது ரூபாய், மதிய உணவு 100 ரூபாய் எனச் சொல்ல, மாரியப்பன் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டான். மற்ற 9 திருடர்களையும் ஜெயிலர் தனியே அழைத்து, ஒவ்வொரு நாளும் தினம் ஒருவராக மாரியப்பன் வாங்கும் சம்பளத்தை பிக்பாக்கெட் அடிக்க வேண்டும். வெளியே தெரியக் கூடாது. தெரிந்தால் உங்கள் 9 பேருக்கும் சாப்பாடு கிடையாது என்று கூறினார்.
அதன்படியே ஒவ்வொரு நாளும் ஆளுக்கொருவராக மாரியப்பனின் பணத்தைத் திருட, கையில் காசில்லாமல் அவனும் பசியால் வாட, ஏதோ அரைக் கவளம், ஒரு வாய் என இரக்கப்பட்டுச் சிறிதளவே உணவு கொடுக்கப்பட்டது. மற்ற 9 பேருக்கும் அது வருத்தமளித்தாலும், ஒரு ஆள் பட்டினி கிடைப்பது பெரிதா? 9 பேர் பட்டினி கிடப்பது பெரிதா என்ற நோக்கத்தில் யோசித்து செய்தனர்.
ஒவ்வொரு நாளும் ஜெயிலில் இருக்கும் நாட்களில் பசியின் கொடுமை, வேதனை, வலி மட்டுமல்லாது பிக்பாக்கெட் அடிப்பதால் வரும் இழப்பினையும் கஷ்டத்தையும் மாரியப்பன் உணர்ந்தான். உடனிருக்கும் மற்ற 9 பிக்பாக்கெட் திருடர்களும் உணர்ந்தனர்.
பசியின் வேதனையும் கொடுமையும் உணர்ந்தால் மட்டுமே உணவு வீணாவதைத் தடுக்க முடியும். பட்டினியால் வாடுபவர்களை காக்க முடியும்.
இன்று உலக பசி தினம்.
“எத்தனை நாள் நான் சாப்பாடு இல்லாம கஷ்டப்பட்டுருக்கேன் தெரியுமா? அந்த காலத்துல நான் ல்லாம் ஒரு நாளைக்கு ஒரு வேளதான் சோறே சாப்பிட்டேன் தெரியுமா? ” என்று பேச ஆரம்பித்தாலே…
“அய்ய்ய்ய்யோ.. பெருசு ஆரம்பிச்சிட்டு”என்றே தலையைச் சொறிந்துகொண்டு கடுப்பாகத் திரும்பும் தலைமுறையினரைக் கொண்டுள்ளோம்.
வெகு சிலரே, கண்டு, கேட்டு, புரிந்து, உணர்ந்து செயல்படுகின்றனர்.
**பழைய உணவின் மேல் ஒவ்வாமை**
முன்பெல்லாம் சுமார் 10, 20 வருடங்களுக்கு முன்பு வரையில் காலையில் சமைத்த உணவை மதியமும் இரவும் பயன்படுத்துவார்கள். ஆனால் இன்றைய கலாச்சாரத்தில் காலை இட்லியையோ தோசையையோ மதியம் வைத்துச் சாப்பிட்டால் கொலைக்குற்றமாகப் பார்க்கின்றனர்.
மதியம் மீந்த சாப்பாட்டை இரவு வைத்து சாப்பிடச் சொன்னால் தலையெழுத்தே என்று சாப்பிடும் தலைமுறையை வளர்த்துவருகிறோம். பசியால் பட்டினியால் வாடுவோருக்கு இன்றைய இளைய தலைமுறையினர் சமூக வலைதளைங்களின் மூலம் உதவிகள் செய்திட்டாலும், த்த்தமது தெருக்களில் ஊர்களில் உதவிகள் அன்னதானமும் செய்தாலும், அதன் சதவீதம் என்னவோ 10-20% மட்டுமே உள்ளது.
**பசிக் கொடுமையின் வீச்சு**
2010ஆம் ஆண்டு பசி, பட்டினியின் காரணமாக 7.6மில்லியன் குழந்தைகள், நாளொன்றுக்கு 20,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகில் பசியின் பிடியில் வாழ்வோரில் 62.4 சதவீதம் ஆசியா /தென் பசிபிக் நாடுகளிலேயே வாழ்கின்றனர். ஐ.நா.வின் கணக்கின்படி, ஒரு மனிதன் ஆரோக்கியத்துடன் இருக்க நாள்தோறும் 2,100 கலோரி உணவுகள் கிடைக்க வேண்டும்.
இன்று நாம் உண்ணும் உணவுகளில் கலோரிகளும் நார்ச் சத்துக்களும் இதர புரதங்களும் கிடைக்கின்றனவா? அல்லது ஹைபிரிட் உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோமா என்பது அவரவர் சமையலறைக்கே வெளிச்சம்.
ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில் மக்கள் பட்டினிச் சாவினை அதிகமாக எதிர்கொண்டுவருகின்றனர். உயிர்க்கொல்லி நோய்களை விடவும் அதிகமான இறப்பு உலகளவில் பசியால் ஏற்படும் மரணமே என்று கூறப்படுகிறது.
சமீபத்திய ஆய்வுகளில் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத குழந்தைகளின் அளவு 54.2 சதவீதத்திலிருந்து 38.4 சதவீதமாக குறைந்துள்ளது.
ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தைக்குச் சரிவிகித உணவு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துவருவதாகவும், பத்து வினாடிகளுக்கு ஒரு மரணம் பசி சார்ந்த நோய்களால் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
பசிக்கு நான் சாப்பிட்ட நாட்களை விட பசி என்னை சாப்பிட்ட நாட்கள் அதிகம் என்று போராட்டமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் பல நூறு மக்களிடையேதான் நாம் ஆன் லைன்னில் ஆடர் செய்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.
பசியையும் வறுமையையும் வெல்ல முன்னிற்பது கருணையன்று; நமது கடமை என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
**உணவு அளித்தீர்களா?**
நம்மிடமிருந்தே அதைத் தொடங்குவோம். நம் வீட்டிலிருந்தே ஆரம்பிப்போம். தேவையான அளவு மட்டுமே சமைத்துப் பழகுவோம்.
கடைசியாக நீங்கள் எப்பொழுது இயலாதோருக்கு உணவு வாங்கிக்கொடுத்தீர்கள் என்று கேட்டால் நம்மில் பலர் நிச்சயம் யோசிப்பார்கள். பார்ப்பவர்களையெல்லாம் நல்லாருக்கீங்களா என வாய் வார்த்தையாக கடமைக்காகக் கேட்டுவிட்டுக் கடப்பதை விட, ”சாப்ட்டீங்களா” என மனதாரக் கேட்டுப் பசியாற்றுவோம்.
வாரம் ஒரு முறையேனும் ஒருவருக்கேனும் ஒரு வேளை உணவு அளிப்போம். பட்டினி இல்லாச் சமூகத்தையும் பசி இல்லா உலகத்தையும் உருவாக்குவோம்.
*உன்னால் இன்று நூறு பேருக்கு உணவளிக்க முடியாவிட்டால், ஒருவருக்கேனும் உணவளித்துச்செல்.*
– அன்னை தெரசா.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[தேர்தல் முடிவு: சசிகலா ரியாக்ஷன்!](https://minnambalam.com/k/2019/05/28/27)
**
.
**
[திமுக: ராஜ்ய சபாவுக்குச் செல்பவர்கள் யார்?](https://minnambalam.com/k/2019/05/28/29)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/05/27/68)
**
.
**
[மோடி பதவியேற்பு விழா: யாருக்கெல்லாம் அழைப்பு?](https://minnambalam.com/k/2019/05/28/31)
**
.
**
[ராகுல் பிடிவாதம்: அடுத்த காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங்?](https://minnambalam.com/k/2019/05/28/46)
**
.
.�,”