நாங்குநேரி தொகுதிக்கு திமுக கூட்டணி சார்பாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ரூபி மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வரும் அக்டோபர் 21ஆம் தேதி நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக கடந்த 23,24ஆம்தேதிகளில் சத்திய மூர்த்தி பவனில் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதற்கு முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளே அறிவாலயத்தில் காங்கிரஸ் தலைவர்களை திமுக தலைவர் சந்தித்து பேசினார். அப்போது, திமுக தரப்பில் முழுமையான உழைப்பைத் தரத் தயாராக இருக்கிறோம். ஆனால் பொருளாதார ரீதியில் இப்போது எங்களால் எந்தவித உதவியும் செய்ய முடியாது. அதனால் பண பலமுள்ள வேட்பாளராக தேர்வு செய்யுங்கள் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன், உட்பட 26 பேர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்தனர். அவர்களிடம் நேர்காணலும் நடத்தப்பட்டது. தொகுதிக்குள் பணத்தை செலவு செய்யும் அளவுக்கு வேட்பாளர் தேவை என்ற நிர்ப்பந்தம் எழுந்த நிலையில், சமூக செல்வாக்கும் (கிறிஸ்துவ நாடார்), பண பலமும் கொண்ட வேட்பாளர் என்றால் அது ரூபி மனோகரன் தான் என்பதால் அவரது பெயரே வேட்பாளர் பட்டியலில் முன் வரிசையில் இருப்பதாக மின்னம்பலம் தினசரியில் [கைவிரித்த திமுக: பசையான வேட்பாளர் தேடும் காங்கிரஸ்](https://minnambalam.com/k/2019/09/25/121/nanguneri-congress-dmk-candidate-kumarianandhan-vasanthakumar-rubymanoharan-peteralphonse-currency-mkstalin-ksalagiri) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதற்கிடையில் ரூபி மனோகரன், குமரி அனந்தன் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் அடங்கிய பட்டியலுடன் கே.எஸ்.அழகிரி உட்பட காங்கிரஸ் கட்சியினர் டெல்லி சென்றிருந்தனர். இறுதி செய்யப்பட்ட 3 பேர் பெயருடன் பரிந்துரை கடிதமும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நாங்குநேரி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் நேற்று (செப்டம்பர் 27) அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூபி மனோகரனை நாங்குநேரி வேட்பாளராக நிறுத்த சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரூபி மனோகரன் நாங்குநேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் கன்னியாகுமரியை சேர்ந்தவர். சென்னையில் ரூபி பில்டர்ஸ் என்னும் பெயரில் கட்டுமான தொழில் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.�,