திமுகவில் விஜயபாஸ்கர்? அறிவாலயத்தில் ஆலோசனை!
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு நாடு முழுதும் அமலில் இருந்தாலும், முக்கிய அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு நிர்வாகிகள் வருவதும் முக்கியப் பணிகளை ஆற்றுவதுமாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் நடத்தும் ஆலோசனைகள் நடைமுறைக்கு வருமா என்பதெல்லாம் வேறு விஷயம்.
அந்த வகையில் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கும் தலைமைக் கழக நிர்வாகிகள் சிலர் அவ்வப்போது வந்து நிலுவையில் இருக்கும் அலுவலகப் பணிகளை முடிக்கிறார்கள். வழக்கமாக திமுக அலுவலகம் ஜேஜே என இருக்கும். நிர்வாகப் பணிகள் மேற்கொண்டிருக்கும்போதே கட்சிப் பிரமுகர்களும் நிர்வாகிகளும் மாறி மாறி வந்து சந்திப்பது பொன்னாடை போர்த்துவது, அழைப்பிதழ் கொடுப்பது என்று நேரத்தை எடுத்துக் கொண்டுவிடுவார்கள். இப்போது மாவட்டங்களில் இருந்து எந்த நிர்வாகியும் வர வாய்ப்பில்லாததால், தலைமைக் கழக அலுவலகத்தில் பெண்டிங் வேலைகளை வேகமாக முடித்துக் கொண்டிருக்கிறார்கள் தலைமைக் கழக நிர்வாகிகள்.
வேலை முடிந்ததும் தலைமைக் கழக நிர்வாகிகள் அறிவாலயத்தில் ஆற அமர்ந்து சூடான அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் பேசப்பட்ட ஒரு விஷயம்தான் நம் கவனத்துக்கு வந்தது.
“அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறிவாலயத்தில் அம்பேத்கரின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். அப்போது தலைமைக் கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இந்நிகழ்வு முடிந்ததும் கொஞ்ச நேரம் நிர்வாகிகள் அரசியல் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பேச்சு, ‘இந்த கொரோனா சீசனில் கலைஞர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்?’ என்று போனது. ‘எல்லாரையும் முடக்கிப் போடும் கொரோனாவையே நம்ம தலைவர் முடக்கிப் போட்டிருப்பாரு’ என்று ஒரு நிர்வாகி சிரித்தபடி சொல்ல…, ‘கொரோனா கொடுத்த ஓய்வில் கூட நான் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் உடன்பிறப்பே.., இந்த கொரொனாவை வென்று முடித்த பின் தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருக்கும் அதிமுக அரசு என்ற கொரோனாவையும் நாம் வென்றாக வேண்டும்னு கடிதம் எழுதியிருப்பார்’ என்று இன்னொரு நிர்வாகி கலைஞர் போலவே பேசிக் காட்ட களை கட்டியது விவாதம்.
இன்னொரு மூத்த நிர்வாகி கொஞ்சம் சீரியஸாக பேச ஆரம்பித்தார். ‘தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கொரோனா சீசனில் அதிமுகவை தனிமைப்படுத்தும் முயற்சிகள்ல தீவிரமாகியிருப்பார். அதுக்கு வேற ஒண்ணும் பன்ண மாட்டார். முரசொலி கடிதமே அவருக்கு போதும். பாட்டாளி மக்கள் கட்சியும், தேமுதிகவும் இப்ப அதிமுகவோட அனுசரனையா இருக்கு. முதல்ல அதிமுகவுக்கும் பாமகவுக்குமான இணக்கத்தை உடைக்க முயற்சி பண்ணுவார். ‘கழகம் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சின்னய்யா என்று பாட்டாளி சொந்தங்களால் அன்போடு அழைக்கப்படுகிற என் அன்புத் தம்பி டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆலோசனை இந்திய அரங்கில் தமிழகத்தை தலை நிமிரச் செய்கிறது’னு ஒரு பிட்டைப் போட்டுருவாரு தலைவர், அதைப் படிச்சுட்டு அதிமுகவும் பாமக மேல சூடாகிடும். டாக்டர் ராமதாஸும், ‘நம்ம கட்சி மேல இவ்ளோ மரியாதை வச்சிருக்காரே’னு உருகிடுவாரு.
கூடவே, ‘கோயம்பேடு கட்சி அலுவலகத்தை கொரோனா சிகிச்சைக்காக வாரிக் கொடுத்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்தை பார்த்தாயா? விழிகள் சிவப்பு வெள்ளை உள்ளம் கொண்ட அந்தத் தம்பிக்கு வாழ்த்துகள். இதுபோல் மற்றவர்களும் முன் வர வேண்டும்’ என்று விஜயகாந்த் மீதும் சென்டிமென்ட் தாக்குதல் தொடுத்திருப்பார்.
அடுத்து எடப்பாடி, விஜயபாஸ்கர் மோதலையும் ரொம்ப அழகாக ஹேண்டில் செய்வாரு கலைஞர். ‘மாற்றான் தோட்டத்து மல்லிகையைப் போல தீவிரமாக பணி செய்து வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை எடப்பாடி விலக்கி வைத்தது ஏன்?’ என முரசொலியில் எழுதி விஜயபாஸ்கருக்கும் எடப்பாடிக்கும் இடையேயான சமூக இடைவெளியை இன்னும் அதிகரிக்க வைத்திருப்பார். கூடவே விஜயபாஸ்கருக்கு ஓர் ஆளனுப்பி, ‘தம்பி… அங்க கஷ்டமா இருந்தா இங்க வந்துடுங்க’என்று ஒரு தூண்டிலையும் போட்டு வைத்திருப்பார்’ என்று போய்க் கொண்டிருந்த சுவாரஸ்யமான பேச்சை சென்னை நிர்வாகி ஒருவர் தடம் மாற்றினார்.
“சரி… இப்ப தளபதி எப்படி டீல் பண்றாருனு நினைக்கிறீங்க?”
“பாமககிட்ட பேசிப் பாப்போம்னு தளபதிகிட்ட சொன்னாலே.. ஐயோ அவங்களெல்லாம் எதுக்குங்குறாரு. நம்ம ஆட்சியில அமைச்சரா இருந்த தமிழ் குடிமகனை தேர்தலுக்கு முன்னாடியே மெல்ல மெல்ல ஜெயலலிதா அதிமுகவுல சேர்த்தாங்க. அதேபோல இப்ப அமைச்சர் விஜயபாஸ்கர்கிட்ட… நீங்க சொன்னீங்கன்னா பேசிப் பாக்குறோம், புதுக்கோட்டையில திமுகவுக்கு ஒரு வலுவான கையா இருக்கும். செந்தில்பாலாஜி போல நாலஞ்சு மாவட்டத்துக்கு விஜயபாஸ்கரை வச்சிப் பாத்துக்கலாம்னு சொன்னபோதே தளபதி, ‘ஐயோ அதெல்லாம் சரியா வராது..’னு பதட்டமாயிடுறாரு”
-இப்படியாக போயிருக்கிறது அறிவாலயத்தில் தலைமை நிர்வாகிகளின் ஆலோசனை.
அமைச்சர் விஜயபாஸ்கரை அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வரவைக்க திமுகவில் ஓர் ஓரமாக சில ஏற்பாடுகள் துவங்கியிருக்கிறது என்பதை இந்த ஆலோசனைகள் எடுத்துக் காட்டுகின்றன. முதலில் செந்தில்பாலாஜிக்கும் ஸ்டாலின் இப்படித்தான் எதிர்ப்பு தெரிவித்தார். பிறகு செந்தில்பாலாஜி திமுகவுக்குள் வந்துவிட்டார் என்று சொல்லியபடியே புதுக்கோட்டையில் புதிய கோலம் போடுவதற்காக புள்ளி வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.
-வேந்தன்�,