zதமிழக தலித் அரசியல் வரலாற்றில் திருப்புமுனை!

Published On:

| By Balaji

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேரணியாக சென்ற தலித் தலைவர்கள் ஆளுநரிடம் இந்தக் கோரிக்கையை மனுவாக அளித்துள்ளனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை உடனடியாகக் கைது செய்யத் தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது. இது வன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் செயல் என்று பல்வேறு கட்சிகளும் போராட்டங்கள் நடத்திவருகின்றன. கடந்த 10ஆம் தேதி கேரளாவில் முழு அடைப்பும் நடைபெற்றது. 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் அச்சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைத்திட வலியுறுத்தியும் தமிழகத்தின் அனைத்துத் தலித் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணி செல்வதாக அறிவித்தன. அதன்படி நேற்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் இதுவரை ஒன்றிணையாமல் தனித்தனியாகச் செயல்பட்ட தலித் அமைப்புகள் அனைத்தும் ஒன்று கூடின.

பேரணிக்கு முன்னதாக பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதற்காக அமைக்கப்பட்ட மேடையில் திருமாவளவன், செ.கு.தமிழரசன், ஜான்பாண்டியன், பூவை ஜெகன்மூர்த்தி, ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட தலைவர்களும் இயக்குநர் பா.ரஞ்சித்தும் நின்று கொண்டிருந்தனர். ‘வன்கொடுமைச் சட்டத்தை வஞ்சிக்காதே’ என்றும் மத்திய அரசைக் கண்டித்தும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

**தலைவர்கள் உரை**

**இந்திய குடியரசுக் கட்சித் தலைவர், செ.கு.தமிழரசன்**

“25 ஆண்டுகளுக்கு முன்பு புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியாரிடம் பேசும்போது நம்முடைய அரசியல் எதிரிகளெல்லாம் நம்மைப் பிரித்து வைத்துள்ளனரே என்று சொன்னேன். அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், ‘பொது எதிரிகள் நம்மை ஒன்று சேர்த்துவிடுவார்கள்’ என்று. நம் எதிரிகள்தான் நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். பொது எதிரிகள் என்ன நடக்காது என்று நினைத்தார்களோ… அதை நாம் இங்கு நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.”

**புரட்சிப் பாரதம் கட்சித் தலைவர், பூவை ஜெகன் மூர்த்தி**

“மதுரை மேலவளவிலே ஏழு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். விழுப்புரம் கலவரம் நடந்தது, தர்மபுரி இளவரசன் விவகாரம்… இதிலெல்லாம் வன்கொடுமைச் சட்டத்தில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைத்தது? வன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு யாரை நசுக்குவதற்காக? ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்ந்துவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே இப்படி ஒரு தீர்ப்பை வழங்கினால் எந்தவிதத்தில் நியாயமாக இருக்கும்?”

**தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், ஜான்பாண்டியன்**

“அம்பேத்கர் எழுதிய வன்கொடுமைச் சட்டத்தை தவறாகப் புரிந்துகொண்டு தலித் மக்களை ஒடுக்குவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அன்றிலிருந்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படக் கூடிய தீர்ப்புகள் சரியாக வழங்கப்பட வேண்டும்.”

**விசிக தலைவர், திருமாவளவன்**

“இந்தப் போராட்டம் முதலில் 18ஆம் தேதி நடைபெற இருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று நடைபெற்றுள்ளது. மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாகவும், மெத்தனமாக இருக்கும் மாநில அரசைக் எச்சரிக்கும் விதமாகவும்தான் ஒருங்கிணைந்து அடையாள ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம். இன்னும் தமிழகத்தில் தலித் மக்களின் சக்திகளைக் காட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “பிரதமர் நாற்காலியில் அமர்வதற்கு அம்பேத்கர்தான் காரணம் என்று மோடி நீலிக்கண்ணீர் வடிக்கிறார். இந்தத் தீர்ப்பு ஏற்புடையதல்ல; இதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று கூறுகிறது மத்திய பாஜக அரசு. ஆனால், இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தச் சொல்லி பாஜக ஆளும் மாநிலங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது அப்பட்டமான அநீதி. எந்த வகையிலும் ஏற்கமுடியாத ஒரு கொடூரம். தலித் மக்கள் துப்பாக்கிகளுக்கு பயப்படக் கூடியவர்கள் அல்ல, அரசியலையும் தாண்டி ஒன்று திரளக் கூடியவர்கள் என்பதற்கு இந்தப் போராட்டம் ஒரு சான்று. இதுவே இன்றைக்குச் சென்னையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஆளுக்கொரு திசையாக நாங்கள் சிதறிக் கிடக்கிறோம் என்று நீங்கள் எண்ணிவிடக் கூடாது. எல்லாக் காலத்திலும் நாங்கள் தனித்திருக்க மாட்டோம். சூழ்ச்சிகளை எல்லாம் முறியடிக்கக் கூடிய வகையில்தான் தலைவர்கள் இங்கு ஒருங்கிணைந்துள்ளோம். ஒருபோதும் சதிகளுக்கு நாங்கள் பணிந்துவிட மாட்டோம்” என்றார்.

**ஆளுநரிடம் மனு**

பேரணியானது சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் தொடங்கி ஆளுநர் மாளிகை வரை சென்றது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை சிதைக்காதே என்றும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பேரணிக்கு இடையே பறை இசை, வாள் வீச்சு உள்ளிட்ட தமிழர் பண்பாட்டுக் கலை நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டன.

முடிவில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்த திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் அவரிடம் மனு அளித்தனர். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “வன்கொடுமைச் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயலிழக்கச் செய்யும் வகையில் அவசரச் சட்டத்தை உடனே இயற்ற வேண்டும். இச்சட்டத்தை ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தலித் அமைப்புகளின் சார்பில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் பேரணி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து தலித் மக்களின் உணர்வுகளை மத்திய அரசிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆளுநரிடமும் மனு அளித்துள்ளோம். உங்களின் கோரிக்கை நியாயமானது. கட்டாயம் பிரதமரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வோம் என்று ஆளுநர் எங்களுக்கு உறுதியளித்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “அவரிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்யும் பட்டியலை மாநில அரசு உங்களிடம் வழங்கியுள்ளது. எனவே, காலம் தாழ்த்தாமல் அவர்களை விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்” என்று தெரிவித்த திருமாவளவன், “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றீர்களா என்றும் ஆளுநரிடம் கேட்டோம்” என்றும் கூறினார். “இந்த மூன்று கோரிக்கைகளுக்கும் சாதகமான பதிலை ஆளுநர் தந்திருக்கிறார்” என்றும் திருமாவளவன் கூறினார்.

**எங்கே கிருஷ்ணசாமி?**

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டின் அனைத்து தலித் இயக்கங்களும் ஒன்றிணைந்து நிற்க தென்மாவட்டங்களில் தலித் மக்களின் ஆதரவு பெற்ற வெகுஜன தலித் கட்சியான புதிய தமிழகம் கட்சி மட்டும் இதில் கலந்துகொள்ளவில்லை. நீட் உட்பட பல்வேறு விவகாரங்களில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, பாஜக ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்துவரும் நிலையில், அண்மையில் பட்டியல் வெளியேற்றம் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு மாநாடு ஒன்றையும் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் தலித் இயக்கங்கள் இடையே இதுவரை ஒற்றுமை நிலவியதாக சரித்திரம் இல்லை. மாறாக ஒரு தலித் இயக்கத்திலிருந்து மற்றொரு தலித் இயக்கம் பிளவுபட்ட வரலாறுதான் உள்ளது. இந்த நிலையில் தற்போது தலித் அமைப்புகள் ஒன்றிணைந்திருப்பது தமிழக தலித் அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஒற்றுமை நீடிக்க வேண்டும். இதன்மூலம் தலித்துகளின் இன்னும் பிற அரசியல் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க வலுவாகப் போராட வேண்டும் என்பதே தமிழக தலித் மக்களின் எதிர்பார்ப்பு.

பேரணியால் அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment