zதன்பாலின உறவு : மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

Published On:

| By Balaji

உச்ச நீதிமன்றத்தில் தன் பாலின உறவை குற்றமெனப் பாவிக்கும் இபிகோ பிரிவு377ஐ ரத்து செய்வது தொடர்பான வழக்கின் விசாரணையில் மத்திய அரசு எந்த நிலையையும் எடுக்கவில்லை.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 தன்பாலின உறவை இயற்கைக்கு மாறானது என்றும் அது குற்றம் எனப்பாவித்து குற்றத்திற்காக பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் கூறுகிறது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் இப்பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரி பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தற்போது வழக்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்றைய முன்தினம் (10.07.18) தொடங்கிய விசாரணையில் மத்திய அரசு பிரிவு 377ஐ ரத்து செய்வதற்கான முடிவை உச்ச நீதிமன்றத்திடமே விட்டு விடுவதாக அறிவித்தது. நேற்று(12.07.18) நடந்த விசாரணையில் சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்வதை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்று எந்த நிலையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

கடந்த நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தன்பாலின உறவை குற்றமாக பாவிக்கும் 377 ஐ ரத்து செய்யப்படக்கூடாது என்ற வாதங்களும், ரத்து செய்யப்படவேண்டும் என்ற பிரதி வாதங்களும் காரசாரமாக நடைபெற்றன.

பிரிவு 377 நீடிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த கிருஸ்துவ அமைப்புகளின் சார்பாக மனோஜ் ஜார்ஜ் மற்றும் சில வழக்கறிஞர்களும் அதற்கு எதிரணியில் சியாம் திவான், மேனகா குருசாமி, ரோஹட்கி உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்களும் வாதிட்டனர்.

377ற்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர்கள் விலங்குகள் மட்டுமே தன் பாலின உறவில் ஈடுபடும். இது இந்திய பண்பாட்டிற்கு எதிரானது என்றும் பிரிவு 377ஐ ரத்து செய்தால் தன் பாலின உறவாளர்கள் பல உரிமைகளை கோரத் தொடங்குவார்கள் என்றும் கூறினர்.

பிரிவு 377 ரத்து செய்யப்பட வேண்டும் என்று வாதிட்ட வழக்கறிஞர்கள் சட்டத்தின் முன்பாக அனைவரும் சமம் என்பதை இப்பிரிவு மீறுகிறது. பாலியல் விருப்பம் என்பது தனி மனித விருப்பம் அவரவர் விருப்பத்துடன் துணைவரை தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பது அடிப்படை உரிமையாகும். இந்தியாவின் வரலாற்றில் தன் பாலின உறவு இருந்து வந்துள்ளது. . கோயில் சிற்பங்களிலும் இதைக்காணலாம் என்று கூறி வாதிட்டனர்.

இதைக்கேட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அரசியல் சட்டப்படியான ஒழுக்கமே(constitutional morality) கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் மாறாக பெரும்பான்மைவாத ஒழுக்கவாதம் (majoritian morality) கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து இன்றைய வாதங்கள் முடிவுற்றன. நாளையும் விசாரணை நடைபெறுகிறது.

இந்த விவாகாரத்தில் மத்திய அரசு எந்த நிலையும் எடுக்காமல் நீதிமன்றத்திடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. இதன் மூலம் உச்ச நீதிமன்றம் என்ன முடிவு எடுத்தாலும் அது அரசின் முடிவல்ல என்று கூறி தப்பித்துக்கொள்வதே அதன் அரசியல் உத்தி என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share