zடாக்டர்களின் கவனக்குறைவு: அரசுக்கு நோட்டீஸ்!

Published On:

| By Balaji

குடும்பக் கட்டுப்பாடு செய்த பிறகும், மருத்துவர்களின் கவனக்குறைவால் மூன்றாவது பெண் குழந்தையைப் பெற்ற பெண், ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தனம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார். “எனக்கு 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 2014ஆம் ஆண்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அதற்கான சான்றிதழும் என்னிடம் இருக்கிறது.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதியன்று, கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்குச் சென்றிருந்தேன். அப்போது, என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள், நான் கருவுற்று இருப்பதாகக் கூறினர்.

மருத்துவர்களின் அலட்சியத்தால், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எனக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது. இதனால், எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்படி மாவட்டக் குடும்ப நல மையத்தின் துணை இயக்குநர், அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு, அவர்கள் என்னைப் பரிசோதனைக்கு அழைத்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி, கடந்த மே 7ஆம் தேதி, ஜூன் 18ஆம் தேதிகளில் அங்கு பரிசோதனைக்குச் சென்றேன். ஆனால், இதுவரை இழப்பீடு வழங்கும்படி அரசுக்குப் பரிந்துரை செய்யப்படவில்லை. எனவே, எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 31) நீதிபதி மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது, இந்த மனுவுக்கு நான்கு வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி, சுகாதாரம் மற்றும் குடும்பலநலத் துறைச் செயலாளர், மருத்துவக் கல்வி மற்றும் குடும்பநலத் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, இந்த வழக்கை ஒத்தி வைத்தார் நீதிபதி மகாதேவன்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share