பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் கடந்த அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் ரூ.83,346 கோடி மட்டுமே வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’கடந்த அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் 50.1 லட்சம் பேர் தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் இவர்களிடமிருந்து (நவம்பர் 27 நிலவரப்படி) ரூ.83,346 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய செப்டம்பர் மாதம் வசூலான ரூ.92,000 கோடியை விட இது 10 சதவிகிதம் குறைவாகும். ஜூலை மாதத்தில் 58.7 லட்சம் பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 58.9 லட்சம் பேரும், செப்டம்பர் மாதத்தில் 57.3 லட்சம் பேரும் ஜிஎஸ்டிஆர் -3பி ரிட்டன்களைத் தாக்கல் செய்திருந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் 50.1 லட்சம் பேர் மட்டுமே தாக்கல் செய்திருக்கின்றனர்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.10,806 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மேலும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.13,695 கோடியை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான வரி வருவாயானது 2015-16 நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு, 14 சதவிகித வளர்ச்சி விகிதம் இருக்குமாறு இந்தப் புதிய சரக்கு மற்றும் சேவை வரியில் மத்திய அரசால் உறுதியளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் ரூ.95,000 கோடியும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.91,000 கோடியும், செப்டம்பர் மாதத்தில் ரூ.92,150 கோடியும் வரி வசூல் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,