Zஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் – டீசல்!

Published On:

| By Balaji

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறையின் கீழ் பெட்ரோலியம் பொருள்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 6ஆம் தேதி ராய்பூரில் செய்தியாளர்களிடையே பேசிய தர்மேந்திர பிரதான் இதுகுறித்து கூறுகையில், “இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் சர்வதேசச் சந்தையுடன் தொடர்பில் உள்ளது. எப்போதெல்லாம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்கிறதோ அப்போதெல்லாம் இந்தியாவில் பெட்ரோலியப் பொருள்களின் விலையும் உயரும். எங்களது பெட்ரோலிய அமைச்சகத்தைப் பொறுத்தவரையில் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையின் கீழ் பெட்ரோலியப் பொருள்கள் வர வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அதற்கான பல்வேறு ஆலோசனைகளும் கோரிக்கைகளும் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலியப் பொருள்களுக்கான வரி ஒழுங்கமைப்பட்டதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 6 நிலவரப்படி, பெட்ரோல் விலை முந்தைய நாள் விலையிலிருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.76.75 ஆக உள்ளது. டீசலின் விலை லிட்டருக்கு 3 காசுகள் அதிகரித்து ரூ.68.44 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்கள் கொண்டுவரப்பட்டால் அவற்றின் விலை கட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel