தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைகளிலும் செய்தி சேனல்களை ஒளிபரப்பக் கூடாது என்று சிறைக் கண்காணிப்பாளர்களுக்கு சிறைத் துறை டிஐஜி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் பொழுதுபோக்கிற்காகத் தொலைக்காட்சி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தி மொழியில் மட்டுமே நிகழ்ச்சிகள், செய்திகள் ஒளிபரப்பப்பட்டு வந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், கைதிகளின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையில் தமிழில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், செய்திகள் ஒளிபரப்ப உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இவரது கோரிக்கையைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, சிறையில் தமிழ் மொழியில் செய்திகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைத் துறை கண்காணிப்பாளர்களுக்கும் தமிழக சிறைத் துறை டிஜிபி அசுதோஷ் சுக்லா இன்று (மார்ச் 16) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், சிறைகளில் செய்தி சேனல்களை ஒளிபரப்பக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்கள், இதர பொழுதுபோக்கு தமிழ் சேனல்களை சிறைகளில் ஒளிபரப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,