இஃப்ரா முஃப்தி
மோடியின் கனவுத் திட்டமான புல்லெட் ரயில் திட்டத்துக்குப் போதிய பணமும், நிலமும் இல்லாமல் தடுமாறி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை முதல் அகமதாபாத் வரையில் அமைக்கப்படவுள்ள இந்தியாவின் முதல் புல்லெட் ரயில் திட்டத்துக்கான கட்டமைப்புப் பணி கடந்த ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கியது. இந்தப் பணியை 2022ஆம் ஆண்டுக்குள் முடித்து பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இலக்கை நிறைவேற்றுவதில் தற்போது பல்வேறு சவால்கள் நிறைந்துள்ளன. இந்தத் திட்டத்துக்கான மொத்தச் செலவாக ரூ.1,06,000 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம், இந்தியன் ரயில்வே மற்றும் மகாராஷ்டிரா, குஜராத் மாநில அரசுகள் இந்தத் திட்டத்துக்கான நிதியுதவியை அளிக்கின்றன.
இந்த புல்லெட் ரயில் பயன்பாட்டுக்கு வந்தால் மும்பை முதல் அகமதாபாத் வரையிலான 508 கிலோமீட்டர் தொலைவை இரண்டு மணி நேரத்தில் கடக்கலாம். அதிகபட்சமாக மணிக்கு 323 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில் செல்லும். இந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் *இந்திய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்* பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. நிலம் கையகப்படுத்த முடியாமலும், திட்டத்துக்குத் தேவையான நிதியைப் பெற முடியாமலும் அடிப்படைப் பணிகளைக் கூட முடிக்க இயலாமல் தடுமாறி வருகிறது.
**நிதி நெருக்கடி**
இந்தத் திட்டத்துக்குத் தேவையான ஒட்டுமொத்த நிதியில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் 80 விழுக்காடு நிதியையும் (ரூ.86,000 கோடி), இந்திய ரயில்வே அமைச்சகம் ரூ.10,000 கோடியையும், மகாராஷ்டிர மாநில அரசு ரூ.5,000 கோடியையும், குஜராத் மாநில அரசு ரூ.5,000 கோடியையும் நிதியாக வழங்குகின்றன. இதில் முதல்கட்டமாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் ரூ.5,500 கோடியை செப்டம்பரில் வழங்கியது. ஆனால், அதற்குப் பின்னர் இன்னும் எந்த நிதியையும் வழங்கவில்லை. அதே சமயத்தில் இந்திய ரயில்வே அமைச்சகமும், மகாராஷ்டிரா, குஜராத் மாநில அரசுகளும் இத்திட்டத்துக்கான நிதியை இன்னும் ஒதுக்கவில்லை.
இதுகுறித்து *இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபார்ம் ஃபீட்பேக் இன்ஃப்ரா* தலைவர் விநாயக் சட்டர்ஜி *தி பிரின்ட்* ஊடகத்திடம் பேசுகையில், “இந்தத் திட்டத்துக்கான கட்டமைப்புப் பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டிலோ அல்லது 2023ஆம் ஆண்டிலோ புல்லெட் ரயில் திட்டத்தின் கட்டமைப்புப் பணிகளை முடிப்பது மிகவும் சவாலானது” என்றார். இந்திய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் அதிகாரி ஒருவர் பேசுகையில், “இந்தத் திட்டத்துக்கான டெண்டர் விடும் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கான பணிகளைத் தொடர பணம் தேவைப்படுகிறது. தற்போது நமது சொந்தப் பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது. பின்னர் கடன் தொகையைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.
இரண்டாம் கட்டமாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் இன்னும் நிதியை வழங்கவில்லை என்பதையும், ரயில்வே அமைச்சகமோ அல்லது மாநில அரசுகளோ இன்னும் நிதியை வழங்கவில்லை என்பதையும் இவர் உறுதிப்படுத்தியுள்ளார். இவர் மேலும் கூறுகையில், “அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் டெண்டர் விடும் பணிகள் முழுமையடையும். 2019ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திலிருந்து கட்டமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெறும். இதுவரையில் இரண்டு டெண்டர்களுக்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருகின்றன. *வதோதரா இன்ஸ்டிட்யூட்* நிறுவனத்துக்கான டெண்டர் பணிகள் 30 முதல் 40 விழுக்காடு வரை முடிந்துள்ளன. சபர்மதி டெர்மினஸ் நிறுவனத்துக்கான டெண்டரும் உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
**நில நெருக்கடி**
508 கிலோமீட்டர் தொலைவுக்கான இந்த புல்லெட் ரயில் திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக 1,400 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால், திட்டத்துக்கான பணிகள் தொடங்கி 10 மாதங்களுக்கு மேலாகியும் 0.9 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் வட்டாரத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் நிலம் கையகப்படுத்துதல் மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவே கூறுகின்றன. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தத் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் நீண்டு நடந்தாலும் நிலம் கையகப்படுத்துதலும், மலைகளின் குறுக்கே சுரங்கப் பாதை அமைப்பதும் சவாலை ஏற்படுத்துகிறது. இது திட்டத்தின் பணிகளைப் பாதிக்கிறது. தோராயமாக 300 கிராமங்கள் இந்தத் திட்டத்தால் பாதிப்படைகின்றன. இதில் 250 கிராமங்களில் அளவீட்டுப் பணிகளை முடிந்துள்ளனர்” என்றார்.
குஜராத்தில் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு அதிக இழப்பீட்டுத் தொகையைக் கேட்கின்றனர். இதற்கான வழக்குகளை ஐந்து பேர் தொடுத்திருந்தனர். ஆனால் அதில் நான்கு வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதற்கிடையே மகாராஷ்டிராவிலோ புல்லெட் ரயில் திட்டமே வேண்டாம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் எங்களுக்கு புல்லெட் ரயில் தேவையில்லை என்கின்றனர். புல்லெட் ரயில் திட்டத்தால் நிலத்தை இழப்பவர்கள் மட்டுமின்றி, அரசியல் கோணத்தில் இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்துக்கொண்டு நிலத்தை இழக்காதவர்களும் அங்கு போராட்டத்தில் குதித்துள்ளனர் என்றும் ரயில்வே வட்டாரத்திலிருந்து வெளியாகும் தகவல்கள் கூறுகின்றன.
**இழப்பீட்டுப் பணிகள்**
மகாராஷ்டிராவில் நிலத்தின் மதிப்புக்கு ஏற்ப நான்கு மடங்கு கூடுதல் தொகையை இழப்பீடாகவும், 25 விழுக்காடு போனஸ் தொகையுடன் வழங்குவதாகவும் இந்திய அதிவேக ரயில்கள் கார்ப்பரேஷன் லிமிடெட் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி கூடுதலாக ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க ரூ.3,600 மாதம் ஒன்றுக்கு வழங்கவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. வன நிலங்களுக்கு, வீடுகளை இழப்போருக்கு 50 விழுக்காடும், எஞ்சிய இழப்பீட்டை மாநில அரசுக்கும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் அம்மாநில அரசு முந்தைய காலங்களில் நிர்ணயித்த இழப்பீட்டுத் தொகையை விட, விவசாயிகளுக்கு 4.75 மடங்கு கூடுதலாக வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
எனவே இத்தகைய நெருக்கடி நிலையில்தான் பிரதமர் மோடியின் கனவுத் திட்டமும், இந்தியாவின் முதல் புல்லெட் ரயில் திட்டமுமான மும்பை – அகமதாபாத் புல்லெட் ரயில் திட்டத்தின் கட்டமைப்புப் பணிகள் ஆட்டம்கண்டு வருகின்றன. இதுபோன்ற சூழலில் 2022 ஆகஸ்ட் 15ஆம் தேதி புல்லெட் ரயில் பொதுப் பயன்பாட்டுக்கு வருமா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
**நன்றி:** [தி பிரின்ட்](https://theprint.in/governance/modis-dream-bullet-train-project-has-virtually-no-money-and-no-land-so-far/140779/)
**தமிழில்:** [ர.பிரகாசு](https://twitter.com/prakashprk18)
**நேற்றைய கட்டுரை: [விவசாயத்தைக் கைவிடும் தமிழர்கள்!](https://minnambalam.com/k/2018/10/31/16)
**மின்னஞ்சல் முகவரி: [feedback@minnambalam.com](mailto:feedback@minnambalam.com)**�,”